தூறல்களின் மறைவினில்-கார்த்திகா
மழை நனைத்த
ஈரச் சாலையில்
மரங்களை ஏமாற்றி
மண் உண்ணும்
சிறு மழலைப் பூக்களில்
சிந்தும் இமைகளின் தேடல்!!
நேற்றைய இரவின்
கனாக்களில் பகற்பொழுதினைத்
தத்தெடுத்ததாய் ஞாபகம்
என் கரங்கள் சூட
வண்ணங்களை வாரி
இறைத்த வானவில்
சூரியனில் ஐக்கியமானது இன்று ..
உன் சாயல் பதிந்த
ஒற்றை நொடியும்
செஞ்சாந்து பூசிய போது
தூரத்தில் கண்
பறிக்கிறாய் நீ!