முட்டை போன்டாவும் முட்டாள் பயலும்
எழுத விருப்பமின்றி
எழுந்துச் செல்கிறேன்.
முட்டை போன்டா வாசம்
மூக்கை துளைத்து
வா என்று இழுத்துச் செல்கிறது
முக்கு திரும்பியவுடன்
தேநீர் கடை..
உடைத்து உடைத்து எழுதி
கவிதையென ஏமாற்ற
சற்றும் விருப்பமின்றி
தட்டிலிருந்து
ஒன்றையெடுத்து
வெற்றுச்சிந்தையில்
போன்டாவில் பாதிக்குமேல்
இரைப்பையை தொடும்போது
அவன் நுழைந்தான்.
போன்டா இப்போது
ஹையா என்றவாறு
ஹைட்ராலிக் ஆசிட்டில்
நீந்தத் தொடங்கியது..
குவிந்த பண்டங்களை
வெறித்தபடியும்
தலைச்சொறிந்து
சிரித்தபடியும்
ஏதோ கிறுக்கினான்
முனையுடைந்த
பென்சிலால்.
அடுக்குத்தொடர்
உடன்தொகை
எதுகை மோனை
அவள் அவன்
காபித் தண்ணி
ஏதோதோ உளறலும் கூட.
என்னப்பா சிவலிங்கம்
கையில போன்டாவோட
என்ன யோசனை என்று
நண்பன் முதுகில் தட்டுகயில்
நினைவுத் திரும்பியது
எங்கோ மறைந்தான்
எனக்குள் நுழைந்திருந்த
ஒரு பைத்தியக்காரன்.
--கனா காண்பவன்