236433-லம்பாடி பதிவுசெய்த பாலாவின் பாடலுக்கு, வெண்பா வடிவம் கொடுத்தபோது

236433-லம்பாடி பதிவுசெய்த பாலாவின் பாடலுக்கு, வெண்பா வடிவம் கொடுத்தபோது.:

பாலாவின் பாடல்:

நமக்குள்
மலை பெய்த
நாட்களின்
மண்ணின் மணத்தினை
நீ யெடுத்துச்
சென்று விட்ட பின்
வெறும்
மண்ணினை வைத்து
வனைதல்
மறந்து போன
கையற்ற குயவன்
நான் என்ன செய்ய ?

நீ
மறதியாய்
என்னில்
விட்டுச் சென்றவைகளின்
தாளிடல் திறந்து
வசந்தத்தினொவ்வொரு
அதிகாலையிலும்
என் மீது சொரியும்
சரக்கொன்றைப்
பூக்களின் கண்ணீரில்
கசிந்து வடியும்
விசும்பலின் மஞ்சளை
எத்தனை நாளைக்கு
நான் எனது
மன அலமாரிக்குள்
முடக்கி வைக்க ?

நமக்குள்ளான
பொரித்தலின்
குஞ்சுகளை
என்னிடம் விட்டு விட்டு
இரை தேடிச்சென்ற
நீ
வலசை போவதின்
திசை மறந்து
எங்குற்றாய் எம் பாவாய் ?
உன் நினைவுகளின்
ஆழப் பற்றுதலில்
வேர்விட்டிருக்குமிந்த
மரத்தினை
எத்தனை
மரங்கொத்திகள்
தினந்தோறும்
கொத்திக் குதறுகின்றன
தெரியுமா ?

உனது
நினைவுகளை
அடைகாத்துக்கொண்டிருக்கும்
அந்த
ஒரேவொரு
மயிலிறகு
மட்டுமே இப்போது
மிச்சம் என்னிடம்
அதையும்
உனது சாமரத் தயாரிப்பிற்கு
மனமுவந்து
பரிசளிக்க
நான் தயார்
எப்போது
எடுத்துக்கொண்டு
செல்லப் போகிறாய் ?

எனது வெண்பா-செய்யுள்- வடிவம்:

நம்முள்ளே பெய்தமழை நாளின் மணத்தை,நீ
கம்மென்று உடனெடுத்துக் காற்றானாய்!- உம்மென்று
இருக்கும்,கை யில்லாத இக்குயவன் என்னை
வெறுக்குமே இம்மண்ணும் தான்!

கொன்றைப்பூக் கண்ணில் கசியும் மகரந்தம்
அன்று,நீ என்னுள் அடைத்திட்டுச் –சென்ற
நினைவுகளே என்பேன்,நான்! நீசர் வசந்தமாம்
என்றே அரற்றலும் என்?

உந்தன் நினைவுகள் உள்ளே பொரிந்துள!நீ
வந்திடு,நாள் எண்ணி,நான் வாடுகிறேன்- பொந்திடும்,ஊர்
பொல்லாத நாக்குகள்! பூமிக்குள் வேர்போலும்
அல்லவோ நம்பற்றும் ஆம்!

என்மனப் புத்தகத்தில் இன்றும் மயிலிறகாய்
உன்தன் நினைவை ஒளித்துளேன் – வந்து,நீ
தா,வென்று கேட்காதே! தாளாத் துயரத்தும்
சாமரமாய் உள்ளதது சற்று!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Mar-15, 9:07 pm)
பார்வை : 104

மேலே