அடடாவோ அடடா

மலரிதழில் பனித்துளியும் அசையாது அமர்ந்திருக்கும்
மலைமுகட்டில் முகில்படுத்து அழகாகத் துயிலணையும்
இளந்தென்றல் இதழ்வருட அரும்புகளும் மொட்டவிழும்
இமயகிரி உறைபனியும் இறைவனையே உணரவைக்கும் !
முகில்குளிர்ந்து பொழிமழையில் புவிசெழித்து வளங்கொழிக்கும்
மழைநீரில் மரங்குளித்து தலைசொட்ட நனைந்திருக்கும்
மழையுறிஞ்சும் நிலத்தினிலே பயிர்களெல்லாம் செழித்திருக்கும்
மழைபொழிந்து முடிந்தபின்னே கவின்காளான் குடைபிடிக்கும் !
கருமேகந் திரண்டிருந்தால் மயில்தோகை விரித்தாடும்
கவினருவி கவிபாடிக் களிப்புடனே குதித்துவிழும்
கனிபழுத்துத் தருக்களிலே கிளிகொய்யக் காத்திருக்கும்
நதிக்கரையில் கொக்குகளும் ஒருகாலில் தவமிருக்கும் !
கிழக்கினிலே உதிக்கையிலே கதிரவனும் விழிசிவக்கும்
பரிதிமுக தரிசனத்தில் கமலமலர் இதழ்விரிக்கும்
மதிதவழும் வழியெங்கும் விண்மீன்கள் கண்சிமிட்டும்
எழுவண்ண வானவில்லும் அலங்கார வளைவமைக்கும் !
வயல்வெளியும் குளிர்ச்சியுடன் பசுமைதனைப் பரிசளிக்கும்
வசந்தருது பிறந்ததுமே உதிர்ந்தமரம் துளிர்த்துவிடும்
கடலலைகள் கரையோரம் மிதந்துவந்து நுரைதள்ளும்
இசைபாடும் அலையோசை இதமாக உளங்கிள்ளும் !
இயற்கையொடு மனமிணைந்து வியப்புடனே சிலிர்த்திருக்கும்
அடடாவோ அட!வெனவே அணுஅணுவாய்த் தினம்ரசிக்கும்
இயற்கையிலே இறைகண்டு விழிகசிந்து நெகிழ்ந்திருக்கும்
அடடாவோ அடடாவாய் அதிசயித்துத் தலைவணங்கும் !!