வற்றி போன வார்த்தைகள், வருடி விட்ட பார்வைகள் - சித்ரா
நீர்வீழ்ச்சி வார்த்தைகள்
நின்று போன நொடிகளில்
தாகம் மிஞ்சும்,
தண்ணீரும் பஞ்சம்
நெஞ்சை மட்டும்
கொஞ்சம் நனைக்கும்
ஆசைகளின் தூரல்கள்
இருக்கும் இடம் தெரியாமல்
இருந்த இதயம் இடியாய் துடிக்கிறது..
வீசிப்போன பார்வையின் மின்னல்
விடியல் போலே விழி கூசி
பொய் கதை ஒன்று பேசி போகிறது
இன்னும் மழை வரவில்லை
அன்று தெரியவில்லை
விழுந்த மழை வேரை என்றோ
சென்று அடைந்து விட்டதென..
மேகத்திடம் தூது விட்டு இருந்தால்,
சோகம் கொஞ்சம் குறைந்திருக்கக் கூடும்..
ஏங்கிப் போன நதியால்
இன்று ஏனோ
வான் வழங்குவதை
வாங்கிக் கொள்ள முடியவில்லை
பொழிகின்ற நீரை
தேக்கி வைக்கவும் தெரியவில்லை
கடலை என்று சேருமோ
காதல் இருமுறை மலருமோ?