அப்படியொன்றும் எழுதி கிழித்திடவில்லை - சந்தோஷ்

காதல் ஏக்கம் எழுதினேன்.
’விட்டு ஓடிவிட்டாள் போலிருக்கு
சோகமயத்தில் தாடிவளர்க்கிறது
இவனின் கவிதைகள்’ என
முகஞ்சுளிக்கிறார்களாம்.

காதல் சந்தோஷம் எழுதினேன்
’கற்பனையில் மிதக்கிறான்
பிரம்மாச்சாரி’ என்கிறார்களாம்.

உண்மையில்
உயிரானவளின் நலனுக்காகவே
விட்டுக்கொடுத்த காதலை
நினைத்து நினைத்து
உருகி உருகி என்னவளின்
நினைவுப்பாறையில் செதுக்கியிருந்தேன்
கவிதைச்சிலை ஒன்றினை..!

புலம்புகிறான் புலம்புகிறான் என
என்னைவிட அதிகமாய்
புலம்பித் திரிகிறார்களாம்.
போலி இலக்கியவாதிகள்..!

அனுபவங்களில் தோன்றிய
எண்ணங்கள் யாவற்றையும்
கவிதையில் பரிசம் போட்டேன்
”ஆஹா வந்துவிட்டார்
கார்ல் மார்க்ஸ் “ என
பரிகாசம் செய்கிறார்களாம்.

நூற்றுக்கு எண்பது சதவீதமாக
சமூகப்படைப்புகள் எழுதினேன்.
’அய்யோ இப்படி இவனெழுதினால்
உலகம் உருப்பட்டுவிடும் போலிருக்கே”
சில்லரைகளின் சிலேடை சத்தங்கள்
என் செவிகளை ரணமாக்கியது.

”நானென்ன புத்தனா மகாத்மாவா
எல்லாம் கேட்டு
அடங்கிக்கொண்டு சமாதியாக.......? ”
என வீராப்பும் எழுதினேன்

’அப்படியொன்றும் இவன்
பெரிதாக எழுதி கிழிக்கவில்லையே.’
இப்படித்தான் நையாண்டயிடுகிறது
சில குருட்டுக்கலக்கார புத்திகள்.

ஆம்.........!! ஆம்.............!!
நான் ஒன்றும் பெரிதாய்
எழுதி கிழித்திடவில்லை.....
அவர்களைப்போல..!



இப்போது
எழுத்தாணியின் கூர்முனையால்
வீணர்களின் முகத்தை கிழித்தேன்.

“ ஆஹா நீங்கள் தான்
நீங்களே தான்
பெரிய எழுத்தாளர் “ என்கிறார்கள்.


அடச்சே...!
என்ன மனிதர்களடா இவர்கள் ???


------------------------------------------------------------




-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (23-Mar-15, 5:07 pm)
பார்வை : 173

மேலே