குப்பைத்தொட்டியில் வீசப்படுபவை

குப்பைத்தொட்டியில் வீசப்படுபவை

===========================================ருத்ரா


ஆம்

மதமாற்றம் தான் என் நோக்கம்.

மனிதனின் மதத்தை அல்ல...

கடவுளின் மதத்தை.

உயர்வான மனிதத்தை

வெறும் அச்சுப்பிழைக்குப்பைகள் என்று

அந்த தொட்டிக்குள் வீசப்பட செய்வதற்கு

அந்த கடவுளுக்கு

என்ன உரிமை இருக்கிறது?

கை கால்கள் அழுகவிட்டு

அழகு பார்த்து அழவைப்பதற்கு

எவர் கொடுத்தார் அந்த உரிமையை?

நீங்கள் வேண்டுமானால்

அந்த குறியீடுகளை

அந்த ஸ்தோத்திர வசனங்களை

அந்த பஜனைப் பாட்டுகளை

நாமாவளிகளை

குவித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உரிக்க உரிக்க‌

வர்ணங்கள் மட்டுமே

உங்கள் சந்நிதானங்களாக‌

பரமண்டலங்களாக‌

தோற்றம் தரலாம்.

ஆனால் அந்த நிழல்களை

வெட்டி வீழ்த்த முடியாமல்

நிஜங்களுக்கு அல்லவா

சமாதி கட்ட துடிக்கிறீர்கள்.

புனிதர் பட்டங்களை

பூட்டிவைத்துக்கொள்ளுங்கள்.

உள்ளமும் சிந்தனையும்

அன்பும் பரிவுமாய்

ஒளிர்வதற்குப்பதில்

வெறும்

துருப்பிடித்த பூட்டு சாவியாய்

வினா விடை பாஷ்யங்களின்

கனமான வாக்கியங்லளில்

நசுங்கிப்போவதற்கா

பூப்போன்று கருவாகி

மானிடத்திருவாகி

மண்ணில் வந்தீர்கள்?

எந்தக்கடவுளும்

தன் தந்தை தாய் கண்டதில்லை!

மனிதப்பிஞ்சில்

அந்த பிரபஞ்சம்

தன் கருவை பூப்பதை

அன்போடு உற்று நோக்குங்கள்.

கால தேச எல்லைகளைக்கொண்டு

அதற்கு பூணூல் மாட்டும்

அற்பத்தை

அகற்றி விடுங்கள்.

அகலப்பார்வையில் தான்

அன்பின் வெளிச்சத்தில் தான்

அவதாரங்கள் புரியும்.

மனித சேவையில்

குப்பைத்தொட்டியில் வீசப்படுபவை

அந்த மதங்களும் மற்றவையும் மட்டுமே ஆகும்.

===========================================
===========================================================

எழுதியவர் : ருத்ரா (1-Apr-15, 11:46 am)
பார்வை : 88

மேலே