கனவே கலைந்து போ பாகம்- 13 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

சற்குண பாண்டியன் கொல்லப்படுகிறான்.... நந்தினியின் பின்புலத்தை கிளறுகிறது போலிஸ்.

................................................................................................................................................................................................

போலிசார் சின்னச் சின்ன குழுவாகப் பிரிந்து நிறைய இடங்களில் துப்பு துலக்கினர்.

பிரசாத் கொடுத்த அட்டவணையில் இருந்த குழந்தைகளுள் ஜாஸ்மினுக்கு ரெகார்ட் இல்லை. மற்ற குழந்தைகளின் மெடிகல் ரெகார்ட் முதற் கொண்டு தத்தெடுப்பு ஆவணம் வரை அனைத்தும் போலி!

ரகசிய விசாரணையில் தத்தெடுப்பு ஆவணங்களை தயார் செய்தது சற்குண பாண்டியன் என்பதும் மெடிக்கல் ரெகார்ட்டுகளை தயாரித்தது டாக்டர் சட்டநாதன் என்பதும் தெரிய வந்தது! ஜாஸ்மின் உடல் மும்பை பிணவறையில் இருப்பது தெரிந்தது ! மற்ற குழந்தைகளைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலிசார்!

ஒரு அதிகாரி முரளியிடம் வந்தார். “சார், ஃபோல்டரை பார்த்துட்டோம், நந்தினிக்கு கடந்த ஒரு வருஷத்தில் இருபத்தி ரெண்டு லட்ச ரூபாய் பணம் வந்திருக்கு, சார். ”

வாட்? முரளி வியந்தார்.

இருபத்தி ரெண்டு லட்சம்! எங்கே அந்தப் பணம்? இருபத்தி ரெண்டு லட்சத்தை கையில் வைத்துக் கொண்டு நடந்தா நந்தினி வேலைக்குப் போனாள்?

ஒரு வேளை இது நந்தினி மேல் களங்கம் கற்பிக்கிற சதியோ ??


இன்னொரு தகவல்- போலிஸ் நந்தினியின் அக்கா வீட்டை கண்டு பிடித்து விட்டது. நந்தினியின் அக்கா இதயப் பலவீனம் என்று கிருதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் ஒரு ஐந்து நாள் வரை பூரண ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் இப்போதைக்கு விசாரிக்க முடியவில்லை என்றும் தகவல்கள் வந்தன !

அன்று மதியம் டாக்டர் சட்டநாதன் தனது நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார்........!

ஃபார்மோப்ரின் இருந்த கேன் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. கேனோடு துண்டுச் சீட்டும் இருந்தது. துண்டுச் சீட்டில் ஐந்து பெயர்கள். முதல் பெயர் கிழிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நபர் முருகேசன்; மூன்றாமவர் சற்குண பாண்டியன்; நான்காவது டாக்டர் சட்டநாதன்; ஐந்தாமவர் பஞ்சாபகேசன். போலிசுக்கு ஏற்கெனவே வந்த, வந்து கொண்டிருக்கும் தகவல்கள்படி இவர்கள்தான் போதை மருந்து பிசினஸின் தூண்கள்!

பெயர்கள் பிரசாத் கொடுத்த துண்டுச் சீட்டோடு ஒத்துப் போயின. கையெழுத்தும் ஏறத்தாழ ஒத்திருந்தது! கிட்டத்தட்ட நந்தினியின் கையெழுத்து! ஏன் கிட்டத்தட்ட என்றால் முதல் சீட்டில் கையெழுத்தில்லை; இருந்ததெல்லாம் கையெழுத்தின் சரியாக விழாத அச்சு மட்டுமே!

மகன் திருமணத்தில் பிஸியாய் இருந்தார் பஞ்சாபகேசன். போலிஸ் உடனே அவரை எச்சரித்தது!

அப்போது மணி மாலை ஏழு முப்பது.

அடுத்த நாள் போலிசுக்கு இன்னொரு செய்தி!

மகன் திருமணத்தை நல்லபடி முடித்த பஞ்சாபகேசன் இரவு எட்டு மணிக்கு இதயம் பலவீனமாகி இறந்தார்!

பஞ்சாபகேசனின் ரத்த மாதிரி தடயவியல் துறைக்கு அனுப்பப் பட்டது. ரத்தத்தில் இண்டரீன் என்கிற மருந்துப் பொருள் காணப்பட்டது. இது செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் இதயத்தை பலவீனமடையச் செய்து விடும். மரணம் ஏற்பட்டது அதனால்தான்.

ஆக, பஞ்சாபகேசனின் இறப்பு இயற்கையல்ல; கொலை செய்யப்பட்டு விட்டார்!

நந்தினியின் அக்கா மாலினி ஐசியுவில் இருந்தார். மாலினியின் கணவரை போலிஸ் விசாரித்தது.

பிரபுராம் என்கிற அதிகாரி விசாரணையை மேற்கொண்டார்.

மாலினி, வீட்டில் இருந்தபடி பட்டுப்புடவை வியாபாரம் செய்பவர். பிரபுராம் தன்னை காவல் துறை அதிகாரி என்று சொல்லிக் கொள்ளாமல் புடவை வாங்க வந்த வாடிக்கையாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நல்லாத்தாங்க இருந்தா; திடீர்னு ராத்திரி நெஞ்சு வலி. தான்யான்னு ஒரு கஸ்டமர்... வெளியூரு! உங்களை மாதிரியே புடவை வாங்க வந்தவ. அவ தான் பதறிப் போயி கிருதியில அட்மிட் பண்ணினா. நான் கூட வாயுப்பிடிப்பா இருக்கலாம்னேன். பொண்ணு விடலியே? சின்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகலாம்னு சொன்னோம். ஐசியு இருக்கற ஆஸ்பத்திரிதான் வேணும்னு கூட்டிட்டுப் போனா! சீஃப் டாக்டரை பார்த்து பேசிட்டுதான் போனா!”

“ரெகுலர் கஸ்டமரோ?

“இல்லைங்க! அன்னைக்குத்தான் அவளை முதல் முதலாப் பார்த்தேன். ”

சீஃப் டாக்டர், தான்யாவின் முகத்தைப் பார்க்கவில்லை என்றார். “ ஆஸ்பத்திரின்னாலே அவங்களுக்கு அலர்ஜியாம். முகத்தை துப்பட்டாவால மூடியிருந்தாங்க” என்றார். மாலினியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஒரு ஐந்து நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென்றும் தான் கூறியதாகத் தெரிவித்தார்.

பரிசீலித்து பார்த்தபோது தான்யா கொடுத்த விலாசம், மொபைல் நம்பர் எல்லாம் பொய்! தான்யாவின் கையெழுத்தும் ஃபார்மோப்ரின் கேனில் கிடைத்த துண்டுச் சீட்டில் இருந்த கையெழுத்தும் அச்சு அசல் ஒன்று!

எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவமனையில் இருந்த மாலினியின் பழைய ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டார்.

அதே சமயம் தடயவியல் துறைக்கு சுதீர் என்ற இளைஞன் வந்திருந்தான்.

“சார், இதுதான் என் மனைவி சுஜாதா” என்றான் இரண்டாவது சடலத்தைக் காட்டி.

“ ஏன்யா? உன் பெண்டாட்டி செத்துப் போய் ஒரு வாரமாகுது? நாங்க அவங்க மொபைல் ஃபோனை வச்சி உன்னை கண்டு பிடிச்சி தகவல் சொல்ல வேண்டியிருக்கு? நீ தேடவே மாட்டியா? இத்தனை நாள் என்ன பண்ணிட்டிருந்தே? ”

“ சார், ரெண்டாவது சம்சாரம் சார்; வீட்டுக்குத் தெரியாது. வீட்டுக்கு ரெண்டு குழந்தைங்க சார்; அவங்களுக்குத் தெரியாம வரணும்னா லேட்தானே சார் ஆகும்? ”

விசாரணையில் நொடியில் தெரிந்து போனது.. இந்த சுதீருக்கு இறந்த பெண்ணின் மேல் துளி அக்கறை இல்லை என்பது. அவள் உடம்புக்காக தாலி கட்டி அனுபவித்திருக்கிறான் ! ஆக, நந்தினி போலிருந்தவள் சுஜாதா என்ற துணை நடிகை. கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவள்.

இவளுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்?

நந்தினி நடிகை; சுஜாதா துணை நடிகை. இவர்களுக்குள் தொழில் ரீதியான சம்பந்தமா ?? அப்படியிருப்பின் நந்தினி போன்ற தோழமையுணர்வுள்ள ஒரு பெண் தனது சகாக்களுக்கு இவளை அறிமுகப்படுத்தாமல் விட்டிருப்பாளா ????

ஆனால் ரெஹனா தொழில் நுட்பப் பூங்காவில் இவர்களை சேர்த்துப் பார்த்தவர்கள் ...... யாருமில்லை ! !

பிரசாத் கொடுத்த சிடி போலிஸ் பார்வைக்குப் போனது. இருபத்து நான்கு நிமிடங்களில் அரசல் புரசலாக கழுத்தின் பக்கவாட்டில் தெரிந்த தாலிக்கயிறு அவள் நந்தினி அல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இல்லை. ஏனெனில் நந்தினி டிவி நடிகை. டிவி சீரியலில் கல்யாணமான பெண்ணின் பாத்திரம் அவளுடையது. ஷூட்டிங் முடிந்து இரவுப் பணிக்கு வருபவள் டூப்ளிகேட் தாலியை கழற்ற மறந்திருக்கலாம் !

இருந்தாலும் சுஜாதா நந்தினி வேலை பார்க்கிற காந்திநகர் ஏரியாவில்தான் ஆட்டோ பிடித்திருக்கிறாள்...

இது தவிர கடந்த ஒரு வருடமாக சுஜாதாவின் கணக்கில் மூன்று முறை பத்தாயிரம், இருபதாயிரம் எனத் தொகைகள் வரவாகி இருந்தன ! ! !

இந்த சுஜாதா யாரையாவது பிளாக்மெயில் செய்திருக்கலாம். அதன் காரணமாகவே அவள் கொல்லப்பட்டும் இருக்கலாம். யாரை பிளாக்மெயில் செய்தாள்? அல்லது நந்தினி மாதிரி நடித்து கெட்ட காரியம் செய்ய அனுப்பப் பட்டவளோ? அப்படியெனில் அனுப்பியது யார் ?

சுஜாதா மென்மையாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இன்னொரு பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். கொலை செய்யும் முறை வேறுபடுகிறது. ஆகவே கொலையாளி வேறு; வேறு... ! எனில் நோக்கமும் வேறு; வேறு... !

எனவே, நந்தினிக்கு பதிலாக சுஜாதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் பொய்யாகிறதே?????

தடயவியல் நிபுணர் டாக்டர் மேனகா தம் பங்குக்குப் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார்.! நந்தினியின் அக்கா மாலினிக்கு நெஞ்சு வலி வரக் காரணம் - அவர் ரத்தத்திலும் இண்டரீன் இருக்கிறது என்றார்- எனினும் மிகக் குறைந்த அளவு ! உயிர் போகாத அளவு ! ! ! !




தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-Apr-15, 6:41 pm)
பார்வை : 247

மேலே