கனவே கலைந்து போ பாகம்- 15 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

பிரியம் அபார்ட்மெண்ட்டின் அமானுஷ்ய முடிச்சு அவிழ்கிறது.. நந்தினியின் கைப்பை ரத்தினம் என்கிற பிக்பாக்கெட் திருடனிடம்....

................................................................................................................................................................................................

இன்ஸ்பெக்டர் மூர்த்தியின் உயரதிகாரியான ஆனந்த் அன்று விசாரணைக்கு வந்திருந்தார். அவரும், முரளியும் தனியறையில் அமர்ந்திருந்தனர்.

“ஒரு சின்னப் பொண்ணு நம்மள விடத் துடியா கொலை பண்ணி போட்டிருக்கா!” முரளியிடம் வியந்த ஆனந்த் மூர்த்தியை அழைத்தார். “இந்த கேசுல கொலையானவங்க விவரத்தை நாள் நட்சத்திரத்தோட லிஸ்ட் போட்டுக் கொடுங்க!”

லிஸ்ட் வந்தது!

தேதி.......................... நேரம்...............நபர்....................இடம்

ஆகஸ்டு இருபது ............. 5-5.30 am ............. சுஜாதா காந்திநகரிலிருந்து கோடம்பாக்கம் போகிற வழி
மரணத்துக்கான காரணம் ................அளவுக்கதிகமான போதை.

ஆகஸ்டு இருபது .......9-9.30 Pm ...........?வினோதினி .................கன்னிகாபுரம் ரயில்வே ட்ராக்
மரணத்துக்கான காரணம் பாறாங்கல்.... ஒரு மணி நேரம் முன்னால் மயக்க ஊசி.

ஆகஸ்டு இருபத்தி ஐந்து............. 5.15 am ...........முருகேசன்............. மெரினா பீச்
மரணத்துக்கான காரணம் கார் விபத்து; ஃபார்மோப்ரின்

ஆகஸ்டு இருபத்தி ஆறு .............. 3.30 am ............ சற்குண பாண்டியன்........... சொகுசு பங்களா
மரணத்துக்கான காரணம் ..............கழுத்தறுபட்டு.

ஆகஸ்டு இருபத்தி ஆறு........... 2.30 Pm டாக்டர் சட்டநாதன்........... நீச்சல் குளம்
மரணத்துக்கான காரணம்.............. நீரில் மூழ்கடிக்கப்பட்டு.

ஆகஸ்டு இருபத்தி ஏழு............ 8.00 Pm ................ பஞ்சாபகேசன்.......................... வீடு
மரணத்துக்கான காரணம்............ இதயப் பலவீனம்; இண்டரீன்.

“ சரி மூர்த்தி, என்ன தியரி வச்சிருக்கீங்க? ” ஆனந்த் கேட்டார்.

“ சார்..வந்து....... ” மூர்த்தி தயங்கினார். “ சார், பொதுவா கொலை கேசுல ஆதாரம் கிடைக்குதோ இல்லையோ அனுமானம் கிடைச்சிடும்... இங்க அதுவே தகராறு.... ”

பரவாயில்லை, சொல்லுங்க என்பது போல் அவர் சைகை காட்ட...

“ அதாவது சார், போதை மருந்து கடத்தலுக்கு நந்தினி இடைஞ்சலா இருக்காங்க அதனால அவங்கன்னு நினைச்சு கடத்தல்காரங்க சுஜாதாவை கொல்றாங்க. அப்புறமா அது அவங்க இல்லேன்னு தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்து திரும்பவும் தப்பு தப்பா அவங்க தங்கை வினோதினியை கொல்றாங்க. தங்கை செத்ததுக்கு நந்தினி பழி வாங்கறாங்க! ”

“ ஓகே; ஓகே.. ஒரு ஃபைன் மார்னிங் நந்தினி மாதிரி ரெண்டு சடலம் கிடைக்குது; எங்கிருந்தோ ஒருத்தன் நந்தினி உயிரோடதான் இருக்காங்க, பழி வாங்கப் போறாங்கன்னு தகவல் சொல்றான்....யாரா இருந்தாலும் அந்த நிலைமையில இந்த தியரிக்குத்தான் வர முடியும் ! இப்ப இவ்வளவு விவகாரம் நடந்திருக்கு ! தியரிய திருப்பிப் பார்ப்போம்! என்ன ரெடியா? ”

“ ரெடி சார் ! ”

“டாக்டர் மேனகாவை கூப்பிடுங்க! ”

டாக்டர் மேனகா வந்தார்.

“ ரொம்ப தாங்க்ஸ் மேடம்! நீங்கதான் கண்ணைத் திறந்தீங்க! இல்லாட்டி முருகேசன், பஞ்சாபகேசன்- இவங்கள்ளாம் கொலை செய்யப்பட்டது தெரியாமலே போயிருக்கும்! க்ரேட் ஜாப் ! ”

மேனகா சின்னப் புன்னகையில் இது என் கடமை என்பது போல் பார்த்தார்.

“ மேடம், உங்களை மாதிரி அறிவாளியால கூட செத்துப் போனது நந்தினி தான்னு உறுதியா சொல்ல முடியாதா? ”

மேனகா சிரித்தார்.

“ ஐஸ் வச்சது அடிக்கத்தானா? கிரேஸ் ஹாஸ்பிடல்ல நந்தினி ரத்த தானம் பண்ணதா சொல்லி ஒரு ரத்த பாக்கெட் கிடைச்சது. அதில் உள்ள டிஎன்ஏயும், முதல் சடலமும் ஒத்துப் போகுது. இதுக்கு மேல் நான் என்ன சொல்றது? ”

“ ஒரு வேளை சடலத்துக்கு கண்ணு காது கையெல்லாம் நல்லா இருந்தா அப்ப வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு அடையாளம் சொல்லியிருப்பீங்களா? ”

“ கண்டிப்பா... ! ”

“ அடையாளம் தெரியாம நம்மை குழப்பத்தான் கொலையாளி இப்படி செஞ்சானா? ”

“ இல்லை ஆனந்த்! அடையாளம் தெரியாம இருக்க பிணத்தைத்தான் சிதைப்பாங்க! இந்தப் பொண்ணு சாகற சமயம் சுயநினைவோடதான் இருந்திருக்கா; போராடியிருக்கா..அதுக்கான அடையாளம் உடம்புல இருக்கு! ”

“ அப்பா ! ரொம்ப கொடூரமா கொலையாகி இருக்கா ! ஆனா ஏன்? போதை கடத்தலுக்கு இடைஞ்சலா இருந்தாங்கிறது மோடிவ்னா இவ்வளவு கொடூரக் கொலை எதுக்கு? செயலுக்கும் நோக்கத்துக்கும் ஒத்து வரலியே? ”

“ செத்தது வினோதினியா கூட இருக்கலாமே சார்? ” -முரளி இடை மறித்தார்.

“ அங்கதானேங்க இடிக்குது? வினோதினி பத்தி சொல்ல முடிஞ்சவங்க நந்தினியோட அக்கா மாலினிதான். அவங்க ஐசியுவில இருக்காங்க!! வினோதினி விவகாரத்துல ஏதோ ரகசியமிருக்கு ! மாலினி, பஞ்சாபகேசன்! ரெண்டு பேர் உடம்பிலேயும் ஒரே மருந்து. அப்ப ரெண்டு பேருக்கும் மருந்து வச்சது ஒரே ஆளு ! ஆனா பஞ்சாபகேசனுக்கு ஹெவி டோஸ்! மருந்து உடம்புக்குள்ளே போன அரைமணி நேரத்துல வேலை செய்யும்னு சொல்றீங்க! அத வச்சிப் பார்த்தாலும் மாலினிக்கு மருந்து வச்சது தான்யாதான். மருந்து வச்சிட்டு ஏன் காப்பாத்தினாங்க? அதுவும் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க! இப்ப நந்தினி பழி வாங்கற தியரி அடிபட்டுப் போகுதே? நந்தினி போய் அவங்க அக்காவுக்கு மருந்து வைப்பாளா? அதுவும் இதயத்தை பாதிக்கிற மருந்து ! இல்லே, அக்கா மாமாவுக்குத்தான் நந்தினியை அடையாளம் தெரியாதா? ”

“ அப்ப இத்தனை பேரையும் கொலை பண்ணது நந்தினி இல்லே! தான்யா! ”- இது மூர்த்தி.

“ஆனா நந்தினியை பிரசாத் பார்த்திருக்கான்; முருகேசன் வீட்டு கார் டிரைவர் பார்த்திருக்கான்; ஃபார்மோப்ரின் வித்தவன் நந்தினி பேரைத்தான் சொல்றான்! கொலையான சற்குண பாண்டியன் அந்த பேரைத்தான் ரத்தத்துல எழுதி வச்சிருக்கான்! ”- இது காந்தன்.

“சரி, உனக்கும் வேணாம்; எனக்கும் வேணாம்! முதல் ரெண்டு பேரை கொன்னது நந்தினி! அடுத்த ரெண்டு பேரை முடிச்சது தான்யா! சரியா சார்? ”

இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் சப் இன்ஸ்பெக்டர் காந்தனும் பட்டிமன்றம் முடித்து விட்டு ஆவலுடன் ஆனந்த்தை நோக்கினர்.

“சார், அதுலயும் ஒரு பொத்தல் இருக்கு ! ” – இது முரளி.

“என்ன சார்? ”- இது ஆனந்த்.

“சட்டநாதன் கொலையப் பாருங்க? மனுஷன் தொண்ணூறு கிலோ எடையில் எருமை மாதிரி
இருப்பான் ! ! ! அவனை நீச்சல் குளத்தில் போட்டு அமுக்கிக் கொல்ல ஒரு பெண்ணால முடியுமா ?????

யார் முகத்திலும் ஈயாடவில்லை ! ! !


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Apr-15, 7:28 pm)
பார்வை : 276

மேலே