இனி வாழ்க்கை இனிப்பே
"இங்க பாருடா...இனிமேலும் ஒன் பொண்டாட்டிகிட்ட சண்டைபோட நம்மால முடியாது. என்ன கொண்டுபோய் எங்கயாவது விட்டுடு...", என்று அம்மா புலம்பினாள்....
'ம்... இன்னைக்கி என்ன செஞ்சாலோ என் அருமை பொண்டாட்டி' என்று நினைத்துக்கொண்டே உள்ளே வந்தான் சிவா....
இவன் முகம் கைகால் கழுவி வரவும்... நங்கென்ற சத்தத்துடன் கிண்ணத்தில் பால் பாயசம் வைக்கப்பட்டது....
"ஏன்மா வந்தவுடனே காபி கொடுக்கலாமே....? பாயாசத்த கொடுத்தா எப்படி? இன்னைக்கி என்ன ஸ்பெஷல்....!!", என்று கேட்டுக்கொண்டே...சாப்பிட ஆரம்பித்தான்....சிவா...
"ம்... வந்தவுடனேயே குடுக்கலன்னா... உங்கம்மாகிட்ட யாரு
பாட்டு வாங்குறது?" என்றாள் கவிதா....
"என்னங்க மறந்துடுச்சா... இன்னைக்கி உங்களுக்கு பிறந்த நாள் ஆச்சே.. அதான் காலையிலேயே அத்தை கிச்சன்ல பூந்து மணக்க மணக்க... முந்திரி திராட்சை வறுத்து போட்டு, சர்க்கரைய
அதிகமா போட்டு, நான் வேணாம் வேணாம்ன்னு சொல்லியும்
கேக்காம, இரண்டு கிண்ணத்த சாப்டுட்டாங்க.....
ம்... நாளைக்கே சர்க்கரை அதிகமாகி டாக்டர்ட்ட போனா... அவர் என்னதாங்க திட்டுவாரு... ஏன்மா இத்தனை சொல்லியும் உங்க மருமக குணத்தை காட்டிட்டிங்களான்னு...
சர்க்கரை அதிகமானா இப்போல்லாம் எல்லாருக்கும் காலும் கிட்னியும்தான் அதிகமா பாதிக்கப்படுறதா சொல்றாங்க.... அதான் சர்க்கரைய கொஞ்சம் குறைத்துக்கொள்ள சொன்னா... கேக்கமாட்றாங்க.. எதுக்குங்க சொல்றேன் நம்மகூட கடைசிவரைக்கும் அவங்க நல்லபடியா இருக்கறதுக்குதானே", என்றாள்....
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கவிதாவின் மாமியார்
உள்ளே வந்து... "கவிதா அந்த பூ கூடைய எடுடா... நான் கோவிலுக்கு போய்ட்டு வரேன்" என்று சொல்லி புன்னகையுடன்... சென்றார்...
மனதில் இனிமேல் இந்த இனிப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு....