ஆடு புலி ஆட்டம்
ஒத்தி வைத்து
ஒத்தி வைத்து
நீண்டு கொண்டு
நிலுவையிலிருக்கும்
நமது வழக்கினை
முடித்து வைக்கும்
முதல் வார்த்தை
யாரிடம்
ஒளிந்துகொண்டிருக்கிறதென்பதை
கண்டறிவதிலேயே
கடந்து போன நமது காலங்களில் -
குப்பைத்தொட்டியில்
அள்ளி எறிந்த
கசடுகளெனக் கிடக்கின்றென
நீ யென்னிலெறிந்த
உனது சொற்கள் ....
காய்ந்த வடுக்களை
பிய்த்துச் செதுக்கி
அன்பின் அளவுக்குகந்த
சொற்களடங்கிய
நிசப்தத்தினை கூர்மையாக்கி
உன்னை நானும்
என்னை நீயும்
ஒருவரையொருவர்
குதறிக் குதறி
நிம்மதியற்றாடுமிந்த
ஆடு புலியாட்டப்
பந்தயத்தின்
பலி பீடத்தில்
குற்றுயிரும்
குலையுயிருமாய்
கிடக்கிறது நம் நட்பு ....
பாரபட்சம் நிறை
இப்பூவுலகில்
நேசத்தை நேசிக்கிறவனெவனும்
வெறுப்பினை
கைகொள்ளக் கடவனெனில் -
வெறுப்பானது
நீதிமானுனது
கை நெருப்பாய் இருக்கையில்
தாங்க முடியாயாததாகிவிட்ட
ரணம் மிகுந்த
இப்பந்தயத்திலிருந்து
குருதி கொட்டும் காயங்களோடு
மனமுவந்து
விலகிக் கொள்கிறேன் ....
ஆயினும்
பத்திரமாய்
ஒளித்து வைத்திருப்பேன்
இதயத்தின் நாளங்களில்
மிதக்கும் அத்தனை செல்களிலும்
நமது நட்பினை .