கற்பனை மிதக்கும் கடைவிழி - தேன்மொழியன்

கற்பனை மிதக்கும் கடைவிழி - தேன்மொழியன்

கற்பனை மிதக்கும் கடைவிழி .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்குப் பார்த்து சிரிக்கையில
மேற்கும் மெதுவாய் முறைக்குதடி ..

வானம் பார்த்து ரசிக்கையில
பூமி பிளந்து விழுங்குதடி ...!

விழிகள் விரும்பிய எழில் நிறமும்
எரியும் தீயில் கருகுதடி ..

உணர்வை ஒதுக்கிய உயர் உறவு
செயலின் முடிவில் வாழுதடி ..

சித்திரை மாத அனல் சிதறல்
உடைந்த மனதை ஒட்டுதடி..

கனவை விரட்டும் விரலின் தாகம்
விண்மீன் மடியில் துள்ளுதடி ...

வார்த்தை கடத்திய காற்றுக்குள்
வர்ணனை மிகையாய் பொழியுதடி ...

சுடிதார் உடுத்திய கவிதைக்குள்
உணர்வை ரசிப்பது காதலடி ...

நகங்கள் கீறிய மேசைகளும்
நடன கலையில் சிறக்குமடி ...

கூந்தல் சூடிய மொட்டுகளும்
வாடாத முறையில் மலருமடி ...

பாதம் உரசிய மண்துகளும்
தங்க சிமிராய் மின்னுதடி ...

குடிநீர் குடிக்கும் குவளைக்குள்
வருகைப் பதிவாய் அமிர்தமடி ...

தேகம் குளித்த நீர்த்துளியும்
அழகியல் அருவியாய் வீழுமடி ...

கடித்துத் துப்பிய நகநுனியும்
இரவில் மின்னும் வைரமடி ...

விருப்பம் மறுத்த தேன்மொழியில்
உயிர்வளி உருக்கிய இதயமடி ...

கற்பனை மிதக்கும் கடைவிழியில்
எழுதிய கவிதை சொற்பமடி ..

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Apr-15, 4:29 pm)
பார்வை : 202

மேலே