பள்ளி மணி

நான்
ஒரு பள்ளி மணி !
கோவில் மணி ஒலித்தால்
பக்தர் கூடி தம் நலன்வேண்டி
இறைவனிடம் வேண்டுவார்கள் !
காலையில் நான் ஒலித்தால்
தெய்வங்களெல்லாம் ஒன்று கூடி
தாய் நாட்டையும் தாய் மொழியையும்
உரக்க வாழ்த்திப் பாடுவார்கள் !
விடுதலை என்னவென்று
பொடிப் பயல்கள் அறிந்து கொண்டது
மாலையில் நான் எழுப்பும்
நீண்ட மணியோசையால்தான் !
காலையில்-
சீக்கிரமே ஒலிப்பதாகவும்
மாலையில்-
தாமதித்து ஒலிப்பதாகவும்
மாணாக்கர்களுக்கு என்றுமே
மனக்குறை என்மீது !
வார விடுமுறைகள்தாம்
எனது மௌன விரத நாட்கள் !
திங்களன்று மட்டும்
கொஞ்சம் கொடூரமாக
ஒலிப்பதாக எனக்கே தோன்றும் !
தேர்வு நேரம் முடிகின்ற
ஐந்து நிமிடம் முன்பொலிக்கும்
ஒற்றையடி ஓசைக்குப்பின்
இதயங்களின் லப்டப்புக்கள்
அதிகரிக்கும் முழக்கங்கள்
என்னையே பயமுறுத்தும் !
இன்று-
பள்ளியின் புதுக் கட்டிட
அடிக்கல் நாட்டு விழாவாம் !
மாநிலத்தின் முதன்மைக்
காவல் அதிகாரி கையால் !
பரிவாரங்களோடு
வராந்தாவைக் கடக்கயிலே
அந்த சிறப்பு விருந்தினர்
என்னைத் தடவிச் சென்றார் !
சிலிர்ப்படைந்த எனக்குப்
புரிந்து விட்டது யாரென்று !
மதிய உணவு வேளையிலே
வகுப்பு நண்பர் எவருமின்றி
வேப்பமர நிழல் தேடி
பித்தளை தூக்குப் போசியில்
பழங்கஞ்சி அருந்த வரும் -
அறுபதுகளின் இறுதிகளில்
ஆறாம் வகுப்புப் படித்த
ஆறுச்சாமிதான் அது !
இன்று-
ஆறுச்சாமி ஐ பி எஸ் !