1 நீதான் பாரத ரத்னா
மணற்கொள்ளை, மரக்கொள்ளை, தாதுக் கொள்ளை,
மற்றுமுள்ள இயற்கைவளச் சுரண்டல் கொள்ளை,
கணக்கற்ற மந்திரிகள், எம்.எல். ஏக்கள்,
கவுன்சிலர்கள், நகர்த்தலைவர் ஊழல் கொள்ளை,
பணக்கொள்ளை நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை,
பகற்கொள்ளை அதிகாரி கூட்டுக் கொள்ளை,
கணக்கினிலே பொய்யெழுதிச் சுருட்டும் கொள்ளை,
கண்டுபிடிக் கொண்ணாத பிறகொள் ளைகள்
இத்தனையும் தாண்டியிந்த இனிய நாட்டில்
இங்குள்ள பொதுமக்கள் உழைப்பால் ஆண்டில்
பத்துசத வீதத்தில் வளர்ச்சி என்றால்,
பாரினிலே இதுபெரிய விந்தை தானே?
பத்மசிறீ, பாரத ரத்னா என்ற
பட்டங்கள் நமக்கெல்லாம் தரலாம் தானே?
வித்தகர்கள் நாம்தானே? உழைப்பால் நாட்டை
மென்மேலும் உயர்த்துபவர் நாமே தானே?
- காளி மைந்தன் -