படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை -திருமணம் ரொக்கத்தில்
ஊருகூடிநின்னு தெருவெல்லாம் காண
விர்ருன்னு காருபூட்டி வந்தவரே
யாரு..யாருன்னு தெரியாதப்போ என்னவோ கேள்விகேட்டு
சாருதான் மாப்பிள்ளையின்னு யாரோ ஒருத்தர் சொல்ல
குனிஞ்ச தலை நிமிராம பணிஞ்சு வந்து நிக்கயில
குடுத்தகாபி குடிச்சி முடிக்குமுன்ன
ஒவ்வொருத்தரா கேட்ட கேள்விக்கெல்லாம்
பொட்டப்புள்ள பெத்ததால சத்தமின்றி பதில்சொல்லி
ஏக்கத்தோட எங்க அப்பன் நிக்கயில
எத்தன பவுண் கேட்டுப்புட்ட..
அடுத்தடுத்து குத்தவச்ச மூணுபொண்ண
படிக்கவச்சி சொத்தழிஞ்சு நிக்கயில
வண்டியும் மண்டியுமா நீ கேட்டபணம் இருந்திருந்தா
என்னைக்கோ முடிஞ்சிருக்குமே என்னோட கலியாணம்
நீ மிச்சமீதி வச்சிப்போன பஜ்ஜி சொஜ்ஜிய
திண்ணதால குத்துதா? இல்ல நீ
சொல்லிப்போன வார்த்தையால குத்துதா?
வலிச்ச நெஞ்சுக்கு என்ன சொல்லி நான் அழுவேன்
எழுதிவச்ச கவிதைக்கெல்லாம் இசையிட்ட என்னால
நீ எழுதா கதைக்கொன்னும் வாசிக்க முடியலயே..
அ. சார்லி கிருபாகரன்