படம் பார்த்து கவிதைச் சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - வெறும் வார்த்தை வாழ்வல்ல
வெறும் வார்த்தை வாழ்வல்ல
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உறவிழந்து உடைந்த ஒருவரின்
பஞ்சம் படிந்த தசைகளுக்கும்
தஞ்சம் தராத நெஞ்சத்தின்
விழிகளைக் கீறும் விரலெது ....?
முதிரும் பிழைகளின் பிறவியென
பணம் பரவியப் பாதையில் ...
வாழ்நாள் குறைத்த வளர்ச்சியை
முடக்க முயலும் மூளையெது ..?
நாளையை நரகமாக்கும் நகர்வினில்
தேடலைச் செதுக்கிய தேகத்திற்கு
அடைக்கலம் அளிக்கும் அதிகாரத்தை
அழிக்கத் துடிக்கும் கவிதையெது....?
நீரின்றிப் பிளக்கும் ஆறுகளில்
வளம் சுரண்டும் கரங்களின்
முதுகைத் துளைக்கும் முகமெது ..?
உறக்கம் உறிஞ்சிய இரவென ....
கண்ணாடிக் கட்டிட கதவிற்குள்
உணர்வின்றி சுழலும் உடல்களை
மீட்கும் மெல்லிசை ராகமெது ..?
மறைந்து மடியும் இயற்கையின்
இறுதி உயிரென ....எஞ்சிய
இம்மரத்தின் ஒரேயொரு விதையை
நெகிழி நிறைந்த நிலத்தில் ..நான்
எங்கு விதைப்பின் உலகம் உயிர்க்கும் ...?
- தேன்மொழியன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேற்கண்ட வரிகளை எழுதியது நானென உறுதி கூறுகிறேன்...
அழைப்பிலக்கம்: 7402040707