எந்த தலைமுறை சாட்டை எடுக்கும் == மானம் கெட்டவர்க்கே போட்டிக்கவிதை

மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்
==மனச்சாட்சி கொன்றவர்க்கே பொருட்ச்செல்வம் குவியும்
ஈனப் பிறவிகளாய் இலவசங்கள் நீட்டும்
==இதைவாங்கிக் கொள்வோருக்கு ஏமாற்றம் காட்டும்
ஊன சமுதாயம் உச்சத்தில் வைக்கும்
==ஊதாரித் தனத்தாலே ஊர்சந்தி சிரிக்கும்
ஆன போதிலுமே அறியாதக் கூட்டம்
==அடிபணிந்தே அவர்களுக்கு அபிஷேகம் புரியும்.
கொள்கை கோட்பாட்டை குழிதோண்டி புதைக்கும்
==கொள்ளை அடிப்பதையே கொள்கைஎனக் கொள்ளும்
வெள்ளைக் கரைவேட்டி விருப்புடனே கட்டும்
==வெத்து வேட்டுக்களை வேதமென்று ஓதும்
உள்ளக் கதவடைத்து உணர்ச்சிவசம் பூணும்
==ஊமைத் தனத்தாலே ஊர்முழுதும் சுருட்டும்
கள்ளத் தொழில்செய்து கௌரவமாய் வாழும்
==காவல் நீதியெல்லாம் கைக்குள்ளே போடும்
சொந்த பணமின்றி சொகுசாக வாழும்
==சொர்க்க புரிதாண்டி சுகபோகம் காணும்
பந்த பாசங்கள் பழசெல்லாம் மறக்கும்
==பன்னீர் கொப்பளித்து பகட்டாகத் துப்பும்
எந்த சக்தியையும் எதிர்த்திடவே துணியும்
==ஏமாந்த சட்டமோ இவரிடத்தில் பணியும்
மந்தை கூட்டமென மக்களினை நினைக்கும்
==மாய தனத்தாலே மாண்புமிகு வாகும்
இந்த சமுதாய சட்டத்தின் ஓட்டை
==இருக்கும் இடம்தேடி நுழைகின்ற சீட்டை
முந்தி வாங்குவதில் முன்னேறும் வேட்டை
==முதன்மை எனகொள்ளும் லட்சியத்தின் வேட்கை
சிந்தனை சிதறல்களாய் சீரழிக்க கோட்டை
==சிம்மா சனமமர்ந்து படுத்துகிற பாட்டை
எந்த தலைமுறைதான் இவர்செய்யும் சேட்டை
==இல்லா தொழிப்பதற்கு எடுக்குமொரு சாட்டை?
*மெய்யன் நடராஜ்