பயணம்

தீபாவளிக்கு
ஊருக்குப் போகத்தான்
வேண்டுமா
மூன்று மாதங்களுக்கு
முன்னரே
முடிந்து விட்டன
புகைவண்டி
முன் பதிவுகள்
சென்ற வாரத்தின்
ஒரு நாளில்
ஒரே மணிநேரத்தில்
விற்றுத் தீர்ந்தனவாம்
பேருந்துகளின்
அனைத்து இருக்கைகளும்
ஒற்றைக் காலில்
நின்று கொண்டே
எட்டு மணிநேரப்
பயணம்தான்
இனி சாத்தியம்
அப்படிப்
போய்த்தான்
என்ன
ஆகப் போகிறது
மூன்று நாள்
விடுமுறையில்
பயணக்களைப்பிற்கு
முதல் நாள்
பயணத் தயாரிப்பிற்கு
மூன்றாம் நாள்
நடுவேயுள்ள
இரண்டாம் நாளில்தான்
தொலைக்காட்சி
பார்த்தலும்,
பலகாரம் ருசித்தலும்
பலகாரம்தான்
பண்டிகை என்றால்
இருக்கவே
இருக்கிறது
இங்கே
அர்ச்சனா பேக்கிரி
கொஞ்சம்
மளிகைப் பொருட்களை
முன்கூட்டியே
வாங்கி வைத்தால்
உணவு விடுதிகளின்
ஒருவார விடுமுறையை
ஓரளவு சமாளிக்கலாம்
கேஸ்
தீராமல் இருக்க வேண்டும்
அறை
காலியாகத்தான்
இருக்கும்
பீட்டரிடம்
கேட்டால்
புதுப்பட சிடிக்கள்
தருவான்
நான் ஒருவன்
ஊருக்குப் போகாததால்
உலகம்
அழிந்து விடுமா
என்ன
பால்ய நண்பர்களில்
பலருக்குத்
திருமணம் ஆகிவிட்டது
அக்கா மகளோ
அத்தை மகளோ
எதிர்வீட்டு தேவைதையோ
யாரும் இல்லை
இப்போதெல்லாம்
ஊருக்குப் போவதில்
மிஞ்சுவது
உடல் வலியும்
உறக்கமிமையும் தான்
எளிதாக
அப்பாவை
சமாளித்து விடலாம்
ஆனால்
என்ன பலகாரம்
செய்வது என
ஒருவாரமாக
அலைபேசியில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அம்மாவை
வாசலிலேயே
அமர்ந்து
வருகையை
எதிர்நோக்கியிருக்கும்
அம்மாவை
இரண்டு மாத
கவனிப்பை
இரண்டே நாளில்
நடத்தி விடத்துடிக்கும்
அம்மாவை
இன்னமும்
புத்தாடை
அணிந்து நின்றால்
நெட்டி முறித்து
திருஷ்டி கழிக்கும்
அம்மாவை
பாசப்பசிக்கு
பதார்த்தங்களின்
வடிவில்
அன்பைப் பரிமாறும்
அம்மாவை
எப்படிச் சமாளிப்பது
எந்தப்
பேருந்தையாவது
பிடித்து
எப்படியும்
தன்மகன்
வந்து விடுவான் என
எங்கேயும் ஒருதாய்
எப்போதும்
காத்துக் கொண்டே
இருக்கிறாள்
கடைசித் தருணத்தில்
மனது மாறி
நம்பிக்கையில்லாமல் தான்
இணையத்தில்
முயன்று பார்த்தேன்
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏதோ ஒரு இருக்கை
காலியாக இருந்தது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (22-May-15, 6:31 pm)
Tanglish : payanam
பார்வை : 244

மேலே