கும்பிடுவீர் தீமையெலாம் குலைந்தே போகும்
கல்வியது சிக்கறுக்கு மென்ற காலம்
காணாமல் போய்விட்ட கால மாச்சு .
கல்வியிலே சிக்கல்வந்து சேர லாச்சு .
கணக்கிலவை அடங்காது கேட்பீர் சொல்வேன் .
பள்ளியிலே பிள்ளையினைச் சேர்க்கச் சென்றால்
பலநூறு தந்தால்தான் இடமுண் டென்பார்.
துள்ளுகிற பருவத்துப் பிள்ளை நெஞ்சில்
துடிப்பதனை ஆக்கிவிடும் இந்தப் போக்கு .
எப்படியோ பணம்கொடுத்து இடத்தைப் பற்றும்
எல்லோரும் படிக்கின்றார் எதனை என்றால்
தப்பான வழிசென்று பொருளைச் சேர்க்கத்
தக்கதொரு காலமதை ஆக்கிக் கொள்ள .
பள்ளிகளே பிற்காலக் கள்ளர் கூட்டம்
பதுங்கிவிடும் கூடமென லுறுதி யாச்சு .
தள்ளரிய நற்பழக்கம் தாழ்ந்து போச்சு .
தவறான போக்கிற்கே வழியுண் டாச்சு .
கற்கின்ற காலத்தில் மாணாக் கர்தாம்
கல்வியிலே நாட்டமது கொள்வ தில்லை .
கற்குன்றம் குவித்திருந்தால் அதை நாடி
கல்வீசும் பயிற்சிதனை பெறுதல் கண்டோம் .
சிறுவயதில் கல்வீசக் கற்றுக் கொண்டு
சீறிவரும் பேருந்தைக் கல்லால் தாக்கும்
பெரியதொரு பக்குவத்தைப் பிற்றை நாளில்
பெற்றிடுவர் மாணாக்கர் பெரிதும் கண்டோம் .
கல்லூரி மாணவரைக் கண்டால் போதும்
' கான்ஸ்டேபிள்' தொடைநடுங்கி சாவா னின்று.
கல்வித்தை கற்றிருக்கும் இவர்கள் முன்னால்
கனத்ததொரு துப்பாக்கி வீணாய்ப் போச்சு .
நாட்டினிலே வருகின்ற குழப்ப மெல்லாம்
நன்றாகப் பள்ளியினை நாடிச் சென்று
பூட்டிவைக்கும் . பள்ளிகளைத் திறக்கும் நாளை
படிக்கவரும் மாணவரே முடிபு செய்வார் .
கைக்குறிப்புக் கொண்டுசென்று அதனைப் பார்த்து
காப்பிசெய்தல் எங்களது உரிமை என்றே
'மைக்'வைத்து அறிவித்து மாணாக் கர்தாம்
மனதாரத் தடையின்றித் தவறு செய்வார் .
தீங்கான வழியிதுவென் றவரும் சொன்னால்
திரும்பியவர் வீடுவரல் இல்லை ; இல்லை .
யாங்கேனும் எவரேனும் தடுப்ப ரென்றால்
யாதாகும் அவர்நிலைமை நீரே சொல்வீர் .
இப்படியோர் சமுதாயம் வளர்ந்து வந்தால்
இனிவருநாள் நன்னாளாய் இருத்தல் இல்லை .
எப்படியும் முயன்றிந்த நிலையை மாற்ற
எல்லோரும் ஈடுபடல் வேண்டும் ; வேண்டும் .
ஆசானை மதிக்கின்ற காலம் வந்தால்
அத்தனையும் நல்லவையாய் ஆகும் தானாய் .
கூசாமல் சொல்லுகிறேன் ஆசான் தன்னை
கும்பிடுவீர் தீமையெலாம் குலைந்தே போகும் .