அபார்ட்மெண்ட் சிறுவனே
அடே ! சிறுவா !
உன்னைத்தான் !
இங்கே பார் !
கணினி விளையாட்டை
கணநேரம் ஒத்திவை !
கேள் !
விரிந்திருகிறது
வீதி !
அதில்,
விளையாடுவது தானே
நீதி ?
கட்டம் கட்டு,
குறுக்கே கோடிடு !
ஆடலாம் சடுகுடு !
கைக்குட்டை எடு ,
கண்ணைக் கட்டு !
ஆடு கண்ணாமூச்சி !
ஓடித்தொடுதல்
ஆடியதுண்டா ?
ஒற்றைக் காலிலும்
ஓடித் தொடலாம் !
அதற்குப் பெயர்தான்
நொண்டி !
ஆரோக்கியக் காசுகள்
சேர்ப்பதில்,
அதுவொரு
அற்புத
உண்டி !
அப்புறம்
இன்னோர் விளையாட்டு !
ஒருகால் மடக்கிக்
குந்து !
தேவையில்லை
பந்து !
குச்சியால் குச்சியை
உந்து !
எம்பியெழுவதை,
' கில்லித்தட்டு ' - என்றே நீ
சொல்லித்தட்டு !
நிறம் கூறித்
துரத்தும் ஆட்டம்
பரிச்சையமுண்டா ?
திருடன் போலீஸ்
தெரியுமா ?
நூல் பிடித்தோடி
பட்டம் விட்டதில்லையா ?
உத்திரத்தில்
கயிறு கட்டி
தூரி.............?
என்னடா உனக்கு
எதுவுமே தெரியவில்லை !
மேற்கண்ட
விளையாட்டுக்களில்
வலிமையாகும் உனது
தசை !
வெறும்
கணினியைத் தட்டுவதில்
விரலுக்கு மட்டுமே
விசை !
யாருமில்லையா
வீட்டில் ?
ஓ !
இரவுப்பணி முடித்து
இன்னும் உறங்கும்
தந்தை !
அழகுநிலையம்
சென்று விட்ட
அம்மா !
அலைபேசியில்
மூழ்கிவிட்ட
அக்கா !
சிறப்பு !
கிடக்கிறது
கழுதை !
நான் நீக்குகிறேன்
உனது தனிமையெனும்
பழுதை !
வா வெளியே !
பிரபஞ்சம் பார் !
வெளியை உணர் !
இது,
இறைவனின்
தானம் !
இயற்கையின்
கானம் !
முடிவில்லாது .........
விரிந்திருக்கும்
வானம் !
வா ! வா !
அடடே !
என்ன இது ?
படியிறங்கியதும்
வந்து விட்டதே
சாலை ?
இல்லையா
உனது வீட்டின் முன்
ஒரு
சோலை ?
விளையாட
இல்லை
திடல் !
தொலைவிலுள்ளது
கடல் !
என்னாவது உனது
உடல் ?
நெடியேறிச்
சிவக்கிறது
நாசி !
நுரையீரல்
துளைக்கிறது
தூசி !
உனக்கில்லை,
வீதியில்
விளையாடும்
ஆசி !
அடுக்கு மாடி,
அபார்ட்மெண்ட் சிறுவனே !
விரைந்தோடு
வீட்டுக்குள் !
விட்டதிலிருந்து
விளையாட்டைத் தொடர் !
கணினி காத்திருக்கிறது !!!