தலைப்பிலா கவிதை

தலைப்பிலா கவிதையை எழுதிடவே
களைப்பின்றி சிந்தித்தேன் கருவினை !
மலைத்துப் போனேன் மனதிற்குள்ளே
மலைப்போல குவிந்த சிதறல்களாலே !
சதையிலா பிண்டமும் காண்பவரே
விதையிலா விருட்சமும் உண்டோ !
கதையிலா காணொளி காண்பவரே
பாதையிலா பயணமும் உண்டோ !
பஞ்சமில்லை எவருக்கும் தலைப்பிற்கு
வஞ்சமில்லை வகையாய் வைப்பதற்கு !
கொஞ்சமில்லை சிந்தனைகள் சேமிப்பில்
கஞ்சனில்லை நானுந்தான் செலவழிக்க !
வளமானோர் கவிதையால் மிகசிலரே
வாய்ப்பின்றி தவிப்பவரோ பலருண்டு !
வாசிப்பவரோ இறங்குமுகம் இங்கே
வாதிடுபவரோ ஏறுமுகம் தினம்தினம் !
நினைத்ததை கிறுக்கினேன் நானுமே
நிந்திப்பீர் எனைநிச்சயம் நீங்களுமே !
வடித்திடுவோம் உள்ளத்தில் படிந்ததை
வாழ்த்திடுவோம் எழுதிடும் பாவலரை !
பழனி குமார்