தலைமுறை இடைவெளி

...............................................................................................................................................................................................

அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்து விட்டு துவைத்த வேட்டி துண்டை கொடியில் காயப் போட்டேன். ஒரு வாய் சுக்கு காபிக்கு மனம் ஏங்கியது. வெடவெடக்கிற காலைக் காற்றுக்கு அந்த மணமே சுகமாக இருக்கும். காமாட்சி இருந்தால் நான் சொல்லாமலே புரிந்து கொண்டு இந்நேரம் காபியோடு நின்றிருப்பாள்.

மகனும் மருமகளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. தாழ்வாரத்தில் இருந்த என் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் இப்படித்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

எங்கே தப்பென்று தெரியவில்லை. என் மகன் நல்லவன்தான். சொந்தமாக தொழில் செய்கிறான். மருமகளும் நல்லவள்தான். நான் படியேறி பெண் கேட்டு அழைத்து வந்த மகா லட்சுமிதான். கான்பூரில் பிறந்து வளர்ந்தவள். பட்டு நெசவோடு தொடர்புடைய ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளராக வேலை செய்கிறாள். மகன் குடும்பம் இதுகாறும் கான்பூரில் இருந்தது. இப்போதுதான் மருமகளின் நிறுவனம் ஏதோ மனது வைத்ததால் காஞ்சிபுரம் கிளைக்கு மாற்றலாகி என்னுடன் என் வீட்டுக்கு வந்து இரண்டு மாதமாகிறது.....

என்னவோ தெரியவில்லை, என் வீடுதான்; என் சொந்தம்தான்...ஆனாலும் மனம் விட்டுப் பழக முடியவில்லை.

காமாட்சி ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என்று படுத்தவளில்லை. திடீரென்று இரவு ஒரு மணிக்கு எழுந்து நெஞ்சு வலிக்கிறதென்றாள். என்ன ஏதென்று முடிவெடுப்பதற்குள் திரும்ப அப்படியே தொப்பென்று விழுந்தவள் எழுந்திரிக்க வில்லை. அவள் போய்ச் சேர்ந்து ஆறு மாதமாகிறது. நாற்பத்தைந்து வருடமாக நகமும் சதையுமாகச் சேர்ந்திருந்தவளின் நிரந்தரப் பிரிவு என்னை நடுக்கடல் தீவாக்கி விட்டதோ, அதுவும் என் ரத்த சொந்தங்களிடமிருந்தா?

இது நான் என் முப்பத்தொன்பதாவது வயதில் கட்டிய வீடு. நானும் காமாட்சியும் பார்த்து பார்த்து கட்டிய வீடு. முழுசாக முப்பது வருடமாகிறது. மகனின் நவீன வீட்டுப் பொருள்கள் என் பழைய வீட்டுக்குப் பொருந்தியது ஏதோ கிழவிக்கு கவுன் மாட்டி விட்ட மாதிரி இருக்கிறது.

இப்போது படுக்கையறையை வைத்தே வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அப்போதெல்லாம் விளைச்சலை பொறுத்துதான் வீடு. மாங்காய் ரூம், தேங்காய் ரூம், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயையும் புண்ணாக்கையும் வைக்க ஒரு அறை, நெல்லை காயவைத்து சேமிக்க பரணுடன் ஓர் அறை என்று கணக்குப் போகும்.

கழிப்பறையையும் குளியலறையும் சேர்த்துக் கட்டுவது இப்போதைய பாணி. ஆனால் எனக்கது கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. குளித்து விட்டு வெளியே வந்த பின்னும் எதுவோ ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை.....

எனக்கு, அதிகாலையில் எழுந்து விடவேண்டும். சூரியோதயத்துக்கு முன் காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட வேண்டும். துளசி மாடத்தில் ஒரு விளக்கேற்றி, வீட்டுப் பூஜையறையிலும் ஒரு விளக்கேற்ற வேண்டும். பிறகுதான் சமையல் கட்டுக்குள் நுழைகிற வேலை. காமாட்சி அப்படிதான் செய்வாள். அந்த காலங் கார்த்தாலை கஸ்தூரி மஞ்சள் வாசமும் காபி வாசமும் ஒருங்கே நாசியைத் தீண்டி தட்டி எழுப்பும் பாருங்கள்- அடடா..! ! ஓ ! நான் பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கிறவன் இல்லை; அதே சமயம் ரசனை கெட்டவனும் இல்லை.

இன்று துளசிமாடம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

மருமகள் ஏறத்தாழ இரவு ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை கம்யூட்டரை வைத்துக்கொண்டு லோல்படுகிறாள். காலை ஆறு ஆறரைக்குத்தான் எழுந்திரிக்கிறாள். எட்டு மணிக்கெல்லாம் கடகடவென்று சமையலை முடித்து விட்டு கசகசப்புத் தீரக் குளிக்கிறாள். எண்ணி ஏழே நிமிடங்களில் தயாராகி காரோட்டிக் கொண்டு வேலைக்குப் போய் விடுகிறாள்....

காமாட்சி சமைப்பதைப் பார்த்தால் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளி வேலை செய்வதைப் போலிருக்கும். வழியும் வியர்வையை அடிக்கடி துடைத்துக் கொண்டு நாள் முழுக்க சமையலறையிலேயே விழுந்து கிடப்பாள். தயாராகி வெளியே கிளம்ப குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும்.....

மருமகள் சமைப்பது கலைக்கூடத்தில் லயிப்பதைப் போலிருக்கிறது. மெல்லியதாகப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் அவள் சமைப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். ஒரு நாளைக்கு வேண்டிய அனைத்தையும் காலையிலேயே சமைத்து விடுவாள். பிறகு சமையலறைப் பக்கம் வர மாட்டாள். சமையலறையில் இன்ன வேலைகள் என்றில்லாமல் பாதி வேலைகளை மகனும் செய்கிறான்- மனைவி கற்று கொடுத்திருப்பாள் போலும்; மருமகள் கரிசனத்தோடு ருசியாக சமைத்தாலும்..... வந்து....... வந்து மணமான பெண் குளிக்காமல் சமைப்பது என்னவோ போலிருக்கிறது.

சில அயிட்டங்களை மகன் சமைத்தால் சும்மா சொல்லக்கூடாது; வாயில் வைக்கவே முடியாது- அப்படியிருக்கும். எனவே சமையலறையில் மகன் இருப்பதைப் பார்த்தாலே நான் ஜெலுசில் மற்றும் சில மருந்துகளை தயார்படுத்தி விடுவேன். அவள் சமைக்கட்டுமே என்று சொல்ல பயமாக இருக்கிறது....!

காமாட்சி ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். மருமகள் எல்லாவற்றையும் சமைத்தான பிறகு
“ உம்ம்ம்... புரோட்டீன் இருக்கு; வைட்டமின் சியைக் காணோமே, வரும் போது நெல்லிக்காயோ எலுமிச்சையோ வங்கிட்டு வரணும்” என்று ஞாபகத்துக்கு கையில் எழுதிக் கொள்வாள். அதுவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு நெல்லிக்காயோ, எலுமிச்சம் ஊறுகாயோ பிடிக்கிறதென்றால் சாப்பாட்டில் சேர்க்க வேண்டியதுதானே...? நான் நெல்லிக்காயை நெல்லிக்காயாகவும் கீரையை கீரையாகவும் பார்த்து பழக்கப்பட்டவன். பசிக்கு சாப்பிடுவோம்; புருவத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் புழுதியைத் துடைக்க நேரமின்றி ஓடியாடி வேலை செய்து விட்டு அக்கடாவென்று கட்டாந்தரையில் கையணை வைத்துப் படுப்போம். படுக்கையறையில்தான் என்றில்லை. வீட்டின் எந்த இடத்தில் தலை சாய்த்தாலும் தூக்கம் வரும்... !

மருமகள் நெல்லிக்காயை வைட்டமின் சி என்கிறாள்; கீரையை சுண்ணாம்பு சத்து என்கிறாள்... சுயமாக இயங்காமல் எதுவோ ஆட்டிப் படைப்பதைப் போல் இயங்குகிறாள்.. ! நான் சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அல்லாடுவதைப் போலத்தான் அவளும் இருக்கிறாள் என்பது சந்தோஷம் என்றாலும் அதை சாப்பாட்டு விஷயத்திலா வைக்க வேண்டும்?

இன்னொரு சங்கடம் என்னவெனில் மகன் சமைத்தால் ருசி பார்க்கிறேன் பேர்வழி என்று பாதி அயிட்டங்களை தின்று விடுவான். இதில் இம்சை என்னவென்றால் இடக்கையில் கரண்டியால் எடுத்து வலக்கையில் விட்டு ருசி பார்க்க வேண்டும். அப்படியே கரண்டியை ரெண்டு ஊது ஊதி வாய்க்குள் இட்டு சப்பு கொட்டி விட்டு திரும்பவும் பாத்திரத்தில் போடுவான்.. எச்சில் பண்டத்தை எப்படி படையலிட முடியும்? படையல் வைக்காமல் எப்படி சாப்பிடுவது ? ?

மகனிடம் நேரில் கூப்பிட்டு சொல்லிப் பார்த்தேன். “ உம்ம்ம்.... இது என் வீடு, என் மனுசாள், நான் சாப்பிடுறேன்...” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். இவன் உரிமையுணர்ச்சி நல்லதுதான். இவன் சிறு பையனாக இருந்தபோது இவன் எச்சிலை மட்டுமல்ல, “உச்சா”வைக் கூட நானோ காமாட்சியோ பெரிது படுத்தியதில்லை. ஆனாலும் இன்று அப்படியல்லவே? சில விஷயங்களை இப்படித்தான் கையாள வேண்டும் என்று இருக்கிறதல்லவா?

இவனிடம் என் உணர்வுகளை எப்படி சொல்வேன்? நானும் வாலிபப் பருவத்தில் நாத்திகம் பேசித் திரிந்தவன்தான்...! அடிபட்டு அனுபவப்பட்ட பின் நம்மையும் மீறிய சக்தி ஒன்று உண்டு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. போன மாதம் என்னிடம் பேசிய விசு இன்று இல்லை. படுக்கைக்கு போன காமாட்சிக்கு விடியவே இல்லை. நிரந்தரமின்மையும் மரண பயமும் சரண்டையச் சொல்கிறது- யாரிடம் அல்லது எதனிடம் என்பது முக்கியமில்லை.

ஒரு வயதுக்கப்புறம் கோயிலும் வழிபாடுமே உங்கள் சமூக வாழ்க்கையாகி விடுகிறது. அதைப் புறக்கணித்தால் நீங்களும் புறக்கணிக்கப்படுகிறீர்கள்; காமாட்சி நவநீத கிருஷ்ணன் கோயிலுக்கு கோலம் போட்டு கைங்கர்யம் செய்தாள். நான் கோயில் டிரஸ்டியில் ஒரு மெம்பர். இவன் பக்கத்திலிருந்து எங்களை கவனித்திருந்தால் இவன் எச்சில் எனக்குப் பெரிதாகத் தெரிந்திருக்காது. இவன்தான் நான்கு வயதான என் பேரனைத் தூக்கிக் கொண்டு கான்பூர் போய் விட்டானே? பிரசினை என்று வந்தபோது ஓடி வந்து பார்த்தது டிரஸ்டி மெம்பர்கள்தானே....! என் பழக்க வழக்கம் அவர்களைச் சார்ந்து தானே இருக்கும்?

என் போன்ற வயதினருக்கு எது சௌகரியம் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்கள்? சாய்மானமும் சாப்பாடும்தானே? மண்டையைப் போடுகிற வரை ஏதோ ஒன்றை சாப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. சாப்பாட்டு விவகாரத்தில் பிரசினை வந்தால் என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்த நாள் முழுக்கவே பாழாகிறது.....!

என்னால் இதை வெளியே சொல்ல முடியவில்லை. என்ன இது? வேலைக்குப் போயிட்டு வந்து சமைக்கிறதே பெரிய விஷயம்.. இதுல நொண்டு நொள்ளை சொல்லிட்டிருக்காரே உங்கப்பா என்கிற ரீதியில் என் கருத்து எடுத்துக் கொள்ளப்பட்டால் என்னாவது?

இந்தக் குழந்தைகள் எதை தப்பாக எடுத்துக் கொள்ளும், எதைச் சரியாக எடுத்துக் கொள்ளும் என்பது எனக்கு எப்படித் தெரியும்?

என் தோழன் ராகவன் காலையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு பழகியவன். அவன் மகனும் மருமகளும் வேலைக்குப் போகிறவர்கள். காலையில் வெண்ணெய் தடவிய ரொட்டியும் ஜாமும்தான் சாப்பாட்டு மேஜையில் இடம் பிடித்திருக்கும். மதனி அதாவது ராகவன் மனைவி- இருந்தவரை... ஏதோ பிழைப்பு ஓடியது. மதனி காலமாகி விட்ட பிறகு அவன் வாழ்க்கையின் லட்சியமே காலையில் இட்லி சாப்பிட்டாக வேண்டும் என்ற வெட்கமற்ற வேட்கையாகி விட்டது. ஒரு தரம் “உங்க பரம்பரை மாதிரி நானென்ன காஞ்சதை திங்கிறோம்னு நினைச்சியா” என்று மருமகளைக் கேட்டு விட்டான். அவ்வளவுதான்... !

இவன் “காஞ்சது” என்று குறிப்பிட்டது ரொட்டியை. அவள் “காஞ்சது” என்று எடுத்துக் கொண்டது நரகலை.. ! ஒரு அனுபவப்பட்டவரின் ஸ்மரணையில் காய்ந்த ரொட்டி இருக்க வாய்ப்பே இல்லை என்பது அவள் வாதம். நாக்கு இருக்கிறதே, அது பயங்கரமான சத்துரு.. இதைக் கொண்டா, அதைக் கொண்டா என்று கேட்பதிலும் பேசுவதிலும்...! அதுதான் அவள் மாமனாரையும் ஆட்டிப் படைக்கிறது என்று அவர்களுக்குப் புரிய வைப்பதில் தோற்றேன்.. இப்போது ராகவன் முதியோர் இல்லத்தில்... !

சரி,சரி வேலைக்குப் போகும் பெண், முன்னே பின்னே இருந்தால் என்ன? இன்று குளிக்கவில்லை என்றால் என்ன, நேற்று குளித்தவள்தானே என்றும் என் மகனின் எச்சில்தானே என்றும் சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.... !

ஏனென்றால் ராகவன் புலம்பியதை மறக்க முடியவில்லை... “நான் மூணு வேளை கூட ரொட்டி சாப்புடுறேண்டா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லுடா. நான் தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிக்க சொல்லுடா..என் மகன் தப்புத் தப்பா சின்ன வயசுல பேசினபோது நான் மனசார சிரிக்கலையா? அதைப் போல இதையும் எடுத்துக்கச் சொல்லேண்டா...”

என் நாக்கு என்னையும் முதியோர் இல்லம் அனுப்பாமல் ஓயாதோ?

அன்று பேரன் தண்ணீர் கேட்டான். மருமகள் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து “இந்தா காட்ச்” என்று தூக்கிப் போட்டாள். பேரனும் தண்ணீர் குடித்து விட்டு அதே போல் அம்மாவிடம் பாட்டிலை தூக்கிப் போட்டான்.

நான் வாயடைத்துப் போனேன்.

தண்ணீர் என்பது உயிர் வாழத் தேவையானது. பஞ்ச பூதங்களுள் ஒன்று. ஆகாயம், காற்று, நெருப்பு போல் அல்லாமல் உணவை விளைவித்து தானும் உணவாவது...! அதைக் கையாளும் போது மட்டு மரியாதை வேண்டாமா? ஒரு மதுவைக் கலந்து கொடுப்பதற்கு முறை இருக்கிறதல்லவா? தப்பாகக் கலந்து கொடுத்தால் உங்கள் மேலதிகாரி உங்களுக்குப் பதவி உயர்வை நிறுத்தி வைத்து விடுவாரில்லையா?

என்னைக் கேட்டால் தண்ணீரை உடம்பை வளர்க்காத, வலு சேர்க்காத பிளாஸ்டிக் பாட்டிலில் வைப்பதே தவறென்பேன். எந்த வயதினர் குடிநீர் கேட்டாலும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரெடுத்து டம்ளரில் முக்கால் பாகம் ஊற்றி அவர் விரும்புகிற மட்டும் குடிக்க கொடுக்க வேண்டும். இவரும் அண்ணாந்து குடிக்க வேண்டும்... ! இப்படியா பந்து விளையாடுவது?

எனக்கும் தாகமாகத்தான் இருந்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன். என் முகத்துக்கெதிரே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் பறந்து வரும் பட்சத்தில் அதை சரியாகக் காட்ச் பிடிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கில்லை....

ஆக, சில விவகாரங்கள் என் மன அமைதியை குலைக்கின்றன. காமாட்சி உயிருடனிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? வாயைத் திறந்தாவது அவளிடம் பகிர முடிந்திருக்கும்...! காமாட்சி....! தெய்வமே....! என்னை தனியாகத் தவிக்க விட்டு ஏன் போனாய்? நீயிருந்து நான் போயிருக்கக் கூடாதா? இப்படியெல்லாம் அந்நியமாகி நிற்க வேண்டுமென்று தலையெழுத்தா?

நேற்றிரவு என் மனதில் உள்ளதையெல்லாம் ஒரு பழைய டைரியில் எழுதித் தீர்த்தேன். இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் வருடத்து டைரி. யார் பிரித்து படிக்கப் போகிறார்கள்? அந்த டைரியையும் துளசி மாடத்தில் ஒளித்து வைத்து விட்டேன். பிறகு எடுத்து என் பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்...!

பொழுது மிக மிக மிக மிக மெதுவாகப் போனது. நான் கிடைத்ததை தின்று விட்டு என் தனிமை உலகிற்குள் மௌனமாக ஒடுங்கிக் கொண்டேன். மகனும் மருமகளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். பேரன் பள்ளிக்கு சென்று விட்டான். வெயில் கொளுத்துகிற இந்த பதினோரு மணியில் மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்....

கேட் திறக்கும் சத்தம் கேட்டது. என் பேரன்தான். அபிஷேக்.. பதினான்கு வயதுப் பையன். இவன் என்ன இந்த நேரத்தில் இங்கே?

விடுவிடுவென்று வீட்டுக்குள் நுழைந்தவன் என்னைப் பார்த்ததும் வெளியே போய் விட்டான். திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தான்..

“என்னப்பா? ” என்று கேட்டேன். இடக்கண்ணை மறைத்து விழும் தலைமுடி. எங்கள் வீட்டில் முன்பு ஒரு சேவல் வளர்ந்தது. கொண்டை மடிந்து என்சிசி தொப்பி போல ஒரு கண்ணை மூடியிருக்கும். “டேய் போ..! ( bho! ) உனக்கு ரெண்டு கண்ணுங்கிறதை மறந்துடாதே” என்று அதனிடம் அடிக்கடி சொல்வேன். இவனைப் பார்த்ததும் அந்த சேவல் ஞாபகம் வருகிறது...!

“ ஒண்ணுமில்ல தாத்தா..! ஃபிரண்டோட நோட்டு வீட்டுல இருக்கு; எடுத்துட்டு போக வந்தேன்.. வழக்கம் போல செருப்புக் காலோட உள்ள வந்தேன்.. நீங்க இருந்ததால செருப்பை வெளியே விட்டுட்டு வந்தேன்.. ”

நான் என்ன மறு மொழி சொல்வது? பேரன் படபடப்பாக பேசிக்கொண்டே உள்ளே போய் நோட்டுப்புத்தகத்தை எடுத்துக் கொண்டான். கிளம்பும் சமயம் கேட்டான், “தாத்தா.. எதுனா வேணுமா?”

குடிக்க தண்ணீர் வேண்டும் என்பதாக ஜாடை செய்தேன்.

உள்ளே போன பையன் இன்னும் வரக் காணோம்...

கடமுடா சப்தம் கேட்டு நின்றது.. இன்னும் ஏதேதோ சப்தங்கள்... எழுந்து போய் பார்க்கலாமா என்று தீர்மானிப்பதற்குள் எல்லா சப்தமும் நின்று அமைதி திரும்பியது.

ஏன் இவ்வளவு நேரம் செய்கிறான்? வீட்டில் ஆர் ஓ மெஷின் பழுதாகி விட்டதோ? அவசரமா கிளம்புற நேரம் பெரிசு வேலை வச்சிடுச்சு என்று நினைப்பானோ?

நான் முழுதாக ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். கண்ணைத் திறந்த போது....

அப்படியே பாதாதி கேசம் அதிர்ந்தேன் ! ! ! !

பேரன்தான்..! மூடி போட்ட பித்தளை கூஜா மேல் டம்ளரை கவிழ்த்து இரு கைகளால் நீட்டியபடி பாந்தமாகவும் பவ்யமாகவும் நின்றிருந்தான்.

இந்த பித்தளை கூஜா எங்கள் கல்யாணத்துக்கு வந்த சீர் அல்லவா? சில வருடங்களாகப் பரணில் இருந்தது....

பரணிலிருந்து பேரன் எடுத்திருக்கிறான். அதுதான் அந்த சத்தம்.. சின்னக் கைகள் தேய துலக்கியிருக்கிறான்.. பொன் போல் மின்னியது கூஜா.

பேரனின் மூக்கும் முகவாயும் காமாட்சியைப் போல்.. ! என் புலம்பலைக் கேட்டு காமாட்சியே நேரில் வந்து நிற்கிறாளோ என்று மயங்கினேன். கூஜாவோடு பையனையும் சேர்த்து இழுத்தேன்.

கூஜா தண்ணீரை டம்ளரில் கவிழ்த்தேன். துளசி வாசம்..! குடித்தேன். ஜீரா, மஞ்சள் தூள், துளசி சேர்த்து பக்குவமாகக் காய்ச்சியிருக்கிறான்...! தொண்டையில் இதமாக இறங்கியது தண்ணீர். கண்ணில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்து பார்வை மங்கியது. இந்தப் பக்குவம் காமாட்சி கூட செய்தறியாதது....!

பேரனை இறுக அணைத்தேன். “தாத்தா ஐ லவ் யூ ” என்றான் காதோடு. கூடவே இன்னொன்றும் சொன்னான்.. “உங்க டைரியை படிச்சுட்டேன் !”

எதிர்பாராத விதமாக கன்னத்தில் முத்தமிட்டான். “எனக்கு நேரமாச்சு, டேக் கேர்.! ” பறந்து விட்டான்.

எங்கள் காலத்தில் இவன் வயதில் தாத்தா, அப்பாவிடம் இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவோம்.....!

இப்படி கழுத்தோடு முகத்தை வைத்து... குசும்புக்காரப் பயல்! எதிர்காலத்தில் மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பான்...!

கைபேசி அழைத்தது. என் நண்பன் வேலாயுதம். இவன் மகன் என் மருமகளுக்குக் கீழ் வேலை செய்கிறான்... என்னைப் பேர் சொல்லி கூப்பிடும் என் நண்பன், மருமகளை மேடம் என்றுதான் அழைப்பான். “என்ன, சிவப்பிரகாசம், மேடம் செட்டிலாயிட்டாங்களா? உங்க சம்சாரம் தவறிட்டாங்களாமே? உங்களை தனியா விடக்கூடாது, உங்களோட இருக்கணும்னுதான் தீவிரமா மாற்றலுக்கு முயற்சி பண்ணாங்க.... ” என்றான்.

அப்படியானால் நிறுவனம் தானாக முன் வந்து மாற்றியது என்று என்னிடம் சொன்னது பொய்யா? “எனக்காக நீங்க ஒண்ணும் மெனக்கெட வேண்டாம் ” என்று நான் சொல்லி விடாமல் இருக்க இப்படி சொன்னாளா? என் பெரிய மனுசத் தனத்தை நோகடிக்காமல், பலவீனத்தை அறிந்து கொண்டு வந்திருக்கிறாளா??? மகராசியாய் இரம்மா...!

நெஞ்சம் முழுக்க ஆனந்தம் தளும்பியது. இதை விட வேறென்ன வேண்டும் இந்தக் கிழவனுக்கு?

குளித்து விட்டு சமைப்பதோ சமைத்து விட்டு குளிப்பதோ ஒரு பிரசினையா? மகனை இத்தனை நன்றாக வளர்த்திருக்கிறாளே? காமாட்சி...! காமாட்சி...! நம் பேரன் இன்று என்ன செய்தான் தெரியுமா? இங்கே... இங்கேதான்... கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். முத்தத்து ஈரம் கூட இன்னும் காயவில்லை பார்! நம் மருமகள் மெனக்கெட்டு எனக்காக.... பிறந்த மண்ணை விட்டு.. இ...இ... இதையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்க வில்லையே அம்மா உனக்கு?

எனக்கு ஒன்று புரிந்தது. காலம் மாறலாம்; நாகரிகம் மாறலாம்; அன்பு பாசம் நேசமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது- வெளிப்படுத்துவது வேண்டுமானால் மாறியிருக்கலாம்...!

வீட்டில் யாரும் இல்லாத நேரம்.. நான் மெதுவாக குளிர்பதனப் பெட்டியை நோக்கி நடந்தேன். பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போட்டு, பிடித்து பழக வேண்டும்..! ! ! காட்ச் ! ! !
................................................................................................................................................................................................
முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (11-Jun-15, 8:49 pm)
பார்வை : 396

மேலே