இரத்தக்குளம் 0o0 குமரேசன் கிருஷ்ணன் 0o0

குழிதோண்டி
குறைவாய் நீர்விட்டு
மண்கொஞ்சம் குழைத்து
மனிதன் குளிக்க
தயாரானது அப்பள்ளம்

அணையும் விளக்கு பிரகாசமாய்
அணையாது கொஞ்சம் எரிவதுபோல்
அலங்காரம் செய்யபட்டு
அழைத்து வரப்பட்டன
ஆடுகள்...?

சிறுவர்களும்
பெரியவர்களும்
வேடிக்கைப் பார்க்க
வெட்டப்படும் ஆடுகளின்
இரத்தங்கள் ஊற்றப்பட்டு
இரத்தக் களறியாய் மாறியதந்த இரத்தக்குளம்...

குறிசொல்லும் சாமியாரின்
குளியலுக்கு தயாரான
அக்குளம்...
அத்தனை ஆடுகளையும்
காவு வாங்கியபின்
வாழவைக்க...
வழிசொல்லப் போகிறதாம்...?

எவன் வகுத்து வைத்தது
இந்நியதியென
எவனுக்கும் தெரியாது
எதிர்த்துக் கேட்பவனை மட்டும்
சாமி கண்ணைக் குத்துமாம்...!

எப்போது குத்தப் போகிறதோ
அந்த சாமி
அப்போலி பூசாரியின்
கண்களை...

அதுவரை
அவ்விடத்தில்
ஆடு மந்தைகளும்
மனித மந்தைகளும்
கூட்டமாய்த்தான்
திரிந்து கொண்டிருக்கும்...?
------------------------------------------------------------------
( இன்னமும் திருநெல்வேலி பகுதிகளில் இதுபோல் சம்பிரதாயங்களும், போலி பூசாரிகளும்,நம்பிக்கைகளும் இருப்பது வேதனையான விசயம், மக்கள் விழித்தெழ வேண்டும் என்பதற்காகவே இச்சிறு முயற்சி)

##குமரேசன் கிருஷ்ணன்##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (14-Jun-15, 8:51 am)
பார்வை : 388

மேலே