எல்லாம் அவள் செயல் 2

வாசலிலேயே தவம் கிடக்கின்றன
எப்போது வருவாள்
சுமந்து செல்லலாம் என்று
"அவளின் காலணிகள்"
இல்லை இல்லை
"தேவதை தூக்கிகள்"..

இன்னும் கொஞ்ச நேரம்
தாமதமாக வரட்டும்
இல்லையேல்
பழுதாகி விடட்டும்
அவள் செல்லும் பேருந்து..
வேண்டிக் கொண்டிருந்தது
அவளை பிரிய மணமில்லாத
"பயணிகள் நிழற்குடை"

என்னவாயிற்று அந்த கொக்கிற்கு?
ஓராயிரம் மீன்கள்
வந்து போய் விட்டன காலைச்சுற்றி
ஒன்றையும் பிடிக்கவில்லை
ஒற்றைக்கால் தவத்தையும் முடிக்கவில்லை..
காரணம்
குளித்துச் சென்ற அவளின்
விழிமீனைப் போல்
ஒருமீனும் வரவில்லையாம்..

ஏன் இந்த அடிதடிச் சண்டை
இந்த அலைத்திருடர்களுக்கு?
ஓ...
அவளின்
காலடிச் சுவடுகளை
களவாடச் செல்வதில் ஏற்பட்ட
கலவரமாக இருக்கலாம்...

ஒருவார ஓயாது மழையிலும்
வாடிக்கிடக்கிறது
அவள் தோட்ட ரோஜா செடி
காரணம் வேறொன்றுமில்லை
மழையென்பதால்
அவள் நீருற்ற வில்லையாம்..

இப்போதுதான் பிறவிப்பயன் அடைந்தேனென்று
நிம்மதி பெருமூச்சுயுட்டது நிலைக்கண்ணாடி
ஆமாம்
நெற்றிமுத்தம் வாங்கிவந்த
அவளின் ஸ்டிக்கர் பொட்டை
இதன் நெற்றியில்
அவள் ஒட்டிச்சென்ற போது...

மழையறிவிப்பு ஏதுமில்லை
புயல்ச்சின்னம் இல்லவே இல்லை
பின்னர் எப்படி கனமழை?
புரிந்துவிட்டது..
குடைமறந்துச் சென்ற
அவளின் மேனி தீண்ட
மோகம் கொண்ட மேகங்களின்
திட்டமிட்ட சதிச்செயல் இது..

எழுதியவர் : மணி அமரன் (15-Jun-15, 9:32 am)
பார்வை : 134

மேலே