நான் நிரந்தரமானவன்

நான் நிரந்தரமானவன்....
======================
சிறுகூடல் பட்டியிலே உதித்த வித்தகன்
தேமதுரத் தமிழினிலே பாக்கள் படைத்தவன்
அவன் அள்ளி வடித்த தமிழினிலே துள்ளும் பாடல்
அந்தவினிய கீதம் பருகிடவே செவியின் தேடல்...!!
நண்பனென்று பகைவனையும் நம்பி கெட்டவன்
துயரத்தின் மலையேறி உச்சம் தொட்டவன்
மாதுவோடு பாட்டில்மது உண்டு களித்தவன்
அத்தனையும் பாட்டினிலே கொண்டு வடித்தவன்...!!
முல்லைவனம் பூத்திருக்க வாசம் நுகர்ந்தவன்
அந்த வாசம் அள்ளி அள்ளி பாடல் தொடுத்தவன்
கொஞ்சுமந்த கிள்ளைமொழி கண்டு ரசித்தவன்
மழலையது கண்ணுறங்க தாலாட்டு படித்தவன்...!!
வாழ்க்கை சூறாவளியில் சுழன்று மிரண்டவன்
அனுபவத்தின் பாடத்திலே துன்பம் மீண்டவன்...
ஜனன மரணம் வாழ்வினையே வரவு செலவென்றான்
எதுவரினும் பயமில்லை உயிரும் போகட்டுமென்றான் ..!!
பானையிலே சோறிருந்தால் பூனை சொந்தமாகும்
சோதனை யை பங்கு வைத்தால் சொந்தங்களும் ஓடும்
தத்துவங்கள் சொல்லிவைத்த மா கவியவன் – கவியரசு
புவி யுள்ளமட்டும் வாழ்ந்திடுவான் மகா காவியன்..!!
காதலையும் கடவுளையும் பாட்டினில் வைத்தான்
செய்யும் கர்மவினை இரகசியத்தை ஏட்டினில் வைத்தான்
எடுக்க எடுக்க எள்ளளவும் குறையா அமுதாம் - கண்ணதாசன்
எழுத்தெல்லாம் படிக்க படிக்க திகட்டா சுவையாம்..!!.
அர்த்தமுள்ள இந்துமதம் பேசும் வாழ்விலக்கணம்
சுகிர்த்தவர்க்கு ஏறிடுமோ என்றும் தலைக்கணம்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் எல்லை கண்டவன்
அத்தனையும் கடந்து இந்த உலகை வென்றவன்....!!
மானிட இனத்தினையே ஆட்டி வைத்தவன் - அவர்
மாண்டபோது அதனைக் கூட பாடி அழுதவன்
நிரந்தரமானவனாம் அவன் பாட்டில் சொன்னது
எந்த நிலையினிலும் மரணமில்லை
என்றவனின் கூற்று வென்றது...!!
(குறிப்பு: இலக்கியசோலை பத்திரிக்கை நடத்திய கவி அரங்கில் 27-06-2015 அன்று வாசிக்கப் பட்ட கவிதை. தலைப்பினை தந்து எழுத பணித்த திரு சோலை தமிழினியன் அவர்களுக்கு எனது நன்றிகள்)