குறுங்கவிதைகள் - கவியரசன்

விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
...............................................................................
எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
................................................................................
தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
................................................................................
இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
................................................................................
சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
...............................................................................
புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
................................................................................
நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
...............................................................................
தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
................................................................................
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்

மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று

சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று

ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை

நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை

அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
............................................................................................
அவசியம் எழுத வேண்டுமா.........?
விழிகளால் வார்த்தைகளை
பறித்து
இதழ்களால் மெல்ல
அரைத்து
புன்னகையில் உமிழ்கிறாயே
அதனினும் சிறப்பாய்
கவி ஒன்றுமில்லையடி என்னிடம்
...........................................................................................
இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது
............................................................................................
பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்
...............................................................................................

எழுதியவர் : கவியரசன் (22-Jul-15, 1:30 pm)
பார்வை : 317

மேலே