அன்பின் பிரியங்கள்
முன்னறிவிப்பின்றிக் கசியும் காமம்
விடுபடாத தேகத்தில் அலைகிறது
சர்ப்பத்தின் உக்கிரத்தோடு.
நிரம்பி வழிந்த அணையிலிருந்து
வெளியேறும் நீரின் லாகவத்தோடு
பெருகுகிறது உடல்.
விரகம் தடுத்து...
மீனெனப் பாயும் காதல்
கண்களுக்குள் அடைகாக்கிறது
தன அன்பின் முட்டைகளை.
இடைவெளி தொலைந்துவிட...
கடிகாரத்தால் கணக்கிட இயலாததாகிறது
நம் அன்பின் காலம்.
பூக்களின் வாசனையைத் தூவியபடி
காற்று கடந்து செல்ல...
களிப்பின் சுனை பெருகி
உன்மத்தம் தொலைந்த உடல் ....
இனி...
இரவெங்கும் பேசத் துவங்கும்
நம் அன்பின் பிரியங்களை.