இது விருதல்ல ஊன்றிய விழுது
ஆண்டதமிழ்த் தொல்லினம்
அடிமைப்பட்டுழல்வதோ?
மீண்டுவிடும் நாளெதுவோ
மேல்கிளம்பி எழும்புமோ? என்று
புழுங்கியதோர் காலத்தில்
புறப்பட்டுக் கைகொடுத்தான்
எம்மினத்தை வதைக்கின்றோன்
எவனிங்கே? என்சாதி
என்றினத்தை பழிக்கின்றோன்
யாரிங்கே? கூரிங்கே? ஓ…..
வர்ணாசிரமத்தின் வகையறாவா?
தொகை தொகையாக கால்நடை ஓட்டி
வகை வகையாக மடத்தனம் ஊட்டி
சாமியின்மீது பாரத்தைப் போட்டு
பூநூல் தந்த நால்வகை தர்மத்தால்
தலையில் ஏறி பூமியில் மிதித்தான்
கண்ணீர் குருதி காலம் காலமாய்
மண்ணில் மண்டி ஆறாய் ஒடிற்று!
அந்த மதத்தால் ஆளவும் கொடுத்தது!
அதனை தடுத்து
நிறுத்திட்டக் கல்லணை!
விடியலைக் கொணரும்
காலை விடிவெள்ளி!
மடமையைக் கொளுத்தும்
மதியுடை பெருஞ்சுள்ளி!
எழுத்தராக எழுந்து விரிந்து
எழுதிய சட்டத்தால் ஏற்றம் கொடுத்து,
பழுதுற்ற இனத்தைப் பளிங்கென வளர்த்தோன்!
சரித்திரம் அண்ணலை குறித்திடும் ஆண்டும்!
அவனுக்குப்பின் தொல்லின மக்களை
மெல்லினமாக்க துவல்வதோ அவலம்!
சொல்லடா பதிலை தொல்திருவொடு!
வளவன் துடித்து களம்பல கண்டான்!
மகார் இனத்தின் மகர சோதியில்
விழியை பறித்து, நடையைக்கட்டி
வீழ்ந்த இனத்தை எற்றிப்பிடித்தோன்!
இவனுக்கு அண்ணல் அம்பேத்க்கர் பெயரில் விருது!
இது விருதல்ல... ஆதி பேரின
திராவிட மரங்களின் ஆணிவேர் பிடுங்க
ஆதிக்கம் செய்யும் சூதினைத் தகர்க்க
முத்தமிழ்வித்தகர் கலைஞர் கோமான்
ஆல்போல் தழைக்க ஊன்றிய விழுது!