பாவேந்தர்

( தமிழ் வாழ்த்து )

அழகின் சிரிப்பென்று சிரித்திட்டால் நகையொலிக்கும்
செம்பவள இதழுள்ளே நாற்ற முல்லை ,
விரிப்பென்று மயங்கிட்டேன் ! பற்கள் கண்டே !
விளிகின்ற காதலினால் நினைவு மோட
இருப்பொன்று , முத்தமெனும் பரிசை , நல்க
எசிட்டேன் ! என்னிதய விளக்கமாக ,
மறுப்பொன்றும் சொல்லாமல் , தீர்ப்பு சொன்னாள் !
மனவமைதி தந்தாளே ! தமிழே போற்றி !

( அவையடக்கம் )

வாள்பிடித்த தமிழ் மறவர் வழியிற் தோன்றி
வகைபடுத்த , சமுதாய குறைகள் தீர்க்க
கோல்பிடித்த பெரியீரே ! வணக்க மென்றன்
குறைபிடித்த கவிதன்னை கேட்டே வன்சொல்
வேல் எடுத்து துளைக்காதீர் மேனி தன்னை !
வேண்டிட்டேன் குறைகாணின் எடுத்துக் கூற
தாள்பிடித்து நின்றிட்டேன் ! தாள்பிடித்து
தமிழ்ப்பாட வந்துற்றேன் ! கவியேற்ப்பீரே !

( பாவேந்தர் கண்ட இயற்க்கை )

மயில்பாடி , அழகாடும் வண்ணம்பாடி !
மணம் பாடி , மணம் வீசும் முல்லை பாடி
குயில் பாடி , குறையற்ற பரிதிப் பாடி ,
குளிர் தென்றல் வீசுகின்ற காளைப் பாடி ,
வயல்பாடி , விளைந்திருக்கும் செந்நெல் கன்னல்
வளம்பாடி , முத்தீகும் கடலைப் பாடி ,
புயல்ப் பாடி , மாமலையின் திறமும் பாடி
புவிக்கீந்தார் பாவேந்தர் கவிதை யூற்றாய் !

பாடுகின்ற குயில்கானில் இருந்தே பாட ,
பறக்கின்ற வண்டினங்கள் உண்டே ஆர்த்து ,
கூடுகின்ற பூமனத்தில் மயங்கி நிற்க !
குலவுகின்ற கார்முகிலைக் கண்டே மஞ்ஞை ,
ஆடுகின்ற எழிற்க்கண்டு , தோகை கண்டு ,
அதுகொண்ட பலவண்ண சிறப்பைக் கண்டு,
ஓடுகின்ற நினைவலையை , நிறுத்தி , பெண்கள்
உயர்வுக்குப் பாடிட்டார் இயற்க்கையாலே !

கீச்சென்று கத்துகின்ற ஒளியைக் கேட்டு ,
கிளைதாவும் எண்ணமதை தாவ விட்டார் !
வீச்சென்று பெடையனிலோ துணையின் வாலை
வெடுக்கென்று கடித்திடவே , துணையும் என்ன
ஆச்சென்று ? அணைத்திடவே ஓடும் ! பெட்டை
அணில் மண்ணில் வீழ அதன்மேலே வீழ்ந்து ,
கூச்சலின்றி இல்வாழ்க்கை நடத்தல் கண்டார் !
கொத்தடிமை இல்லாத நிலை வேண்டிட்டார் !

( பாவேந்தர் கண்ட காதல் )

ஆணழகோ மனப்பாடம் விழிகள் கொள்ள ,
அணங்கொப்பாள் கூடமதில் வந்தே நின்று ,
வானழகை செய்கின்ற பரிதிப் போல்வான் ,
வடிவழகை உண்ணுகின்ற நேரந்தன்னில் ,
மானிழையைக் கண்டவிழி மயக்கம் கொள்ள ,
மலர்விழியால் தைத்திட்டால் ! ஆடை தன்னை ,
நாணியவள் திருத்திட்டாள் ! உள்ள மெல்லாம்
நலம்பெறவே கலந்திட்டார் ! வெள்ளம்போலே !

வின்முகிலைக் கிழித்துவரும் திங்கள் போலும்
வடிவுமுகம் , அழகுமுகம் , கொண்டப் பெண்ணை
என்மனத்துள் வைத்திட்டேன் ! இனிஎம் காதல்
இரும்புதனைச் சாய்க்க அதன்மேலே கொட்டும்
தன்மையுள நீரொக்கும் ! விதவை யென்று
தானறிந்தப் போதினிலும் தயங்கிடாது
பெண்ணவளைக் கொள்கின்ற பெருமைக் கூறி
பாடியவர் வேறுண்டோ ? இவரைப் போலே !

( பாவேந்தர் கண்ட தமிழுணர்வு )

கிளையேறும் கனிகொண்ட சுளையே ! முற்றல்
கழையேறும் சாறாகும் ! நிலை மாறாத
மலையேறும் சுனைகொண்ட ஊற்றே ! பூவின்
மணமாகும் , தேன்பாகின் சுவையே ! தென்னங்
குலையேறும் குளிரான நீரே ! கானின்
குழலேறும் இசையாகும் ! இனிதே ! ஆனால்
களியாடும் தமிழொன்றே உயிரே ! என்றார் !

பேராகும் அமுதென்று ! புலவர் கொண்ட
புகழ்மிக்க வேலாகும் ! தமிழர் நாட்டின்
நீராகும் விளைவுக்கு ! வானம் கொண்ட
நிலவாகும் ஒளியிற்க்கு ! தமிழர் வாழ
ஊராகும் , மதுவாகும் , வாளே யாகும் !
வேராகும் ! உரிமைச்செம் பயிரும் வாழ
வலிமிக்க உளமிக்க தீயே ! என்றார் !

தமிழினிமை , தமிழுணர்வு தமிழின் மேன்மை ,
தமிழ்க்காதல் , தமிழுணவு , தமிழின் மேன்மை ,
தமிழ்பேறு , எந்தநாளோ எனும்படிக்கு
தலைப்பெல்லாம் கொடுத்திட்டார் ! பாக்கள் தோரும் !
இமைமூடிக் கிடப்போரை விழிக்கச் செய்து
இன்னிதயம் சோர்வோரை தெளியச் செய்து
நமையெல்லாம் அடலேறாய் மாற்றங் கொள்ள
நவின்றவர் யார் ? புகன்றவர் யார் ? நாவின் வேந்தே !

உறைந்திட்ட குருதிக்கு சூடுமேற்றி
ஓய்ந்திட்ட நரம்புக்கு முறுக்கு மேற்றி
மறைந்திட்ட பார்வைக்கு ஒளியை ஊட்டி
மதிகெட்ட மூடர்க்கு அறிவைக் கூட்டி
விரைந்திட்ட தமிழாலே , தட்டித் தோளும்
நிமிர்கின்ற ‘ பா ‘ சொன்னார் ! சங்க நாதம்
தரங்கெட்டோர் கேட்டாலே நடுங்கி யோட
தளராது முழங்கிட்டார் பாவின் வேந்தே !

( பாவேந்தர் கண்ட விதவைமணம் )

தனையறியாப் பருவத்தில் தாலியேற்று
தலைவியென பேர்கொண்டாள் ! தலைவன் மாண்டான் ,
கனையெறியப் பட்டிட்ட மானைப்போல
கதறுகின்றாள் , பதருகின்றால் , ஊராரெல்லாம்
இணைபிரிந்த இளையவளை விதவையென்று ,
எள்ளிட்டார் , கிள்ளிட்டார் , புண்ணில் மீண்டும் !
தனைவெறுத்து , விதிதன்னை முடித்துக் கொள்ள
தணல்பார்ப்பாள் , புனல்பார்ப்பாள் , கயிறே பார்ப்பாள் !

பெற்றமனம் பற்றிவிட பேதைப் பெண்ணாள் ,
பிரியமுடன் உண்ணுகின்ற பலாவைப் போலவள் இன்னாள் !
குற்றமிலா பழந்தன்னை சேற்றில் போடா ,
குறையில்லா தங்கமதை மண்ணில் வீச ,
உற்றரிவுப் பெற்றிட்ட உலகீர் என்றும் ,
உள்ளுவரோ ? தள்ளுவரோ ? உணர்மின் இன்றே !
கற்றவரே கடைவிரித்து கண்ணீர் மாயும்
காலத்தை சமைத்திடுவீர் ! என்றார் இங்கே !

பதியென்று பலகோயில் தேடிச் சென்று ,
பெற்றோர்கள் பூங்கொடியை , பூக்கா முன்னே
மதியற்றோர் முடித்திட்டார் மணத்தை , ஆனால்
மனம்வீசா முன்னரதை அறுத்தல் நன்றோ ?
கதியான கணவனவன் மனைவி மாண்டால்
கடிமனமும் புரிகின்றார் ! கணவன் மாண்டால்
விதியெனவே , விதவையெனப் பேரைச் சூட்டி ,
விளையாடல் நன்றாமோ ? பெண்ணுக் கிங்கே !

( பாவேந்தர் சாடும் சாதி மதம் )

இல்லாத தெய்வத்தை இருத்தல் போலே ,
இங்குள்ள பார்ப்பனனும் நம்மை யெல்லாம் ,
கல்லாத மூடரென ஆக்கி , நம்பக்
கதைசொன்னான் ! காலடியில் பிறந்தோரென்று ,
பொல்லாத ஆரியத்தால் சூத்திர னென்று ,
பேர்வைத்தான் ! சாதிமதம் பலப் பிரித்தே ,
செல்லாத இதிகாச கதைகள் எல்லாம் ,
செப்பிட்டான் ! தன்னைத்தான் போற்றி , நம்மை

அரக்கனென்று பலவாறு தூற்றி , இந்த
அகிலத்தில் பரப்பிட்டான் ! வேதம் ஓத
மறத்தமிழன் கூடாதாம் ! பார்ப்பான் ஓத
நம்மினமோ பறையடிக்க , தேரிழுக்க
குருக்களென்ற பார்ப்பனனோ தெய்வத்தோடு
குலவிடுவான் , கொஞ்சிடுவான் , அமர்ந்திருப்பான்
இரக்கமில்லா மனதோடு தமிழர் நம்மை
இதயத்தால் வஞ்சித்தே வாழ்ந்திடுவான் !

ஆரியனோ நம்மிடையே பகை வளர்த்து
அதில் லாபம் ஈட்டிடவே முனைந்திருப்பான் !
காரியமாய் அன்றொருநாள் இராமன் என்ற
கரும்பார்ப்பான் தம்பித் தன்னை
பாராளும் அரசுதரும் ஆசைக் காட்டி
பகைதீர்த்தான் முதாதையோரை ! இன்று
நேரிய நெஞ்சில்லாதான் தெய்வப் பேரால்
நம்வலத்தை , செல்வத்தை , வாழ்வை யெல்லாம்
அட்டையென உருஞ்சுகின்றான் என்றே பாவால்
ஆண்வேடம் போட்டுள்ள அளிக்கூட்டத்தை
பட்டைகளும் , கொட்டைகளும் பதறியோட
பாவம்போல் துளைத்திட்டார் ! பாவியோர்கள்
மட்டைகளாய் வீழ்ந்திட்டார் ! நாமோ என்றும்
மதியோடு தமிழனென்ற உணர்வினோடு
பெட்டைகளாய் ஆகாமல் பிழைக்க வந்த
பேடிகளை மடக்கிடுவோம் , அடக்கி வாழ்வோம் !

( பாவேந்தர் காணும் பொதுவுடைமை )

எதுவுடமை எனக்கேட்டால் இல்லையென்போர்
எக்காலும் , இன்முகத்தால் ஏற்றுக்கொள்ளும்
பொதுவுடைமை தத்துவமாம் ! புல்லர் சில்லோர்
பூரிப்பாய் அவர்க்குமட்டும் சொந்தம்போலே
மதிமடமை யாலேமுற் போக்கு மற்றும்
மாசுள்ள பிற்போக்கு எனப்பிரித்தே
பொதுவுடைமை தத்துவத்தை கிழித்தெடுக்கும்
பேதமையை காண்கின்றோம் ! ஆனால் பாவால்

புத்துலகம் படைக்கின்ற புரசிப்பாதை
பொதுவுடைமை கொள்கையினை எட்டுத் திக்கும்
வைத்திடுவோம் ! வடிகின்ற குருதிச் சேற்றால்
விளைந்திட்ட நென்மணியை , செல்வந் தன்னை ,
எத்திப் பிழைப்போர்க்கு தந்தே நாமும்
எத்தனைநாள் பட்டினியாய் பரதவிப்போம் ?
உத்தமனாய் நடித்திங்கே ஊரை யேய்க்கும்
ஒனானுக் கெத்தனைநாள் நடுங்கி வாழ்வோம் ? என்றார்

பாதிக்கும் பசிகூறி நின்றி ருந்தால்
பாபத்தை காரணமாய் சொல்வான் ! வாழ்வின்
நீதிக்குப் போராடி கூலிக் கேட்டால்
நெஞ்சுக்கு நீதியினை சொல்வான் ! நாமோ
வீதிக்கு வந்திட்டோம் வாழ்வோ கெட்டு ,
வடிகின்ற வியர்வைக்கு பதிலே கேட்டு !
சோதிக்கும் எலிமிதிக்க சிங்க ஏறாய்
தோள்கொள்வோம் ! வறுமையினை வேல்குவோமே !

( முடிவுரை )

கவிபாட எனையழைத்த தலைவருக்கும்
கருத்தாட , கரத்தோடு ஒலியுமாட
அவையோடு அமர்ந்துள்ள நன்பருக்கும்
அன்பருக்கும் ஏனையோர்க்கும் என்வணக்க
கவைகொண்டு ‘ கா ‘ தன்னில் கவிதை என்னும்
கனிகொண்டுப் படைத்திட்டேன் ! சுவையோ ? மாறோ ?
எவைதந்தப் போதினிலும் என்னை யேற்க
இதயத்தால் நன்றியினைக் கூறினேனே !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 9:30 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 113

மேலே