தங்க ரதத்திலே நீவருவாய்

பல்லவி
`````````````
மலையேறி வரும்போது மயிலகவு தய்யா
மயிலகவும் ஒலிகேட்டு மனம்சிலிர்க்கு தய்யா
அனுபல்லவி
`````````````````````
ஓங்கார ஓசையிலே உயிருருகு தய்யா
ஆங்கார மகன்றோடி அகமகிழு தய்யா
ஏங்குகின்றேன் அடிபணிந்து இதமளிப்பா யய்யா
பாங்குடனே நீயாடி வரவேணு மய்யா ! ( மலையேறி )
சரணம்
```````````
சந்தம் கொஞ்சிட சலங்கை குலுங்கிட
***சக்தி மைந்தனே நீவருவாய் !
செந்தூர் வேலவ திருவாய் மலர்ந்திட
***சேவற் கொடியுடன் நீவருவாய் !
கந்த வேளுனைக் கனிவாய்த் தொழுதிட
***கண்கள் பனித்திடும் நீவருவாய் !
வந்த வேதனை வருத்தம் தொலைத்திட
***வண்ண மயிலிலே நீவருவாய் ! ( மலையேறி )
மாயை நீங்கிட மனமும் தெளிந்திட
***மாலின் மருகனே நீவருவாய் !
நோயை விரட்டிட நொசிதல் விலக்கிட
***நோக்கம் எழிலுற நீவருவாய் !
தாயைப் போற்றியே தடங்கல் தவிர்த்திட
***தங்க ரதத்திலே நீவருவாய் !
சேயை அணைத்திட செதுக்கும் அழகுடன்
***சிந்தை குளிர்ந்திட நீவருவாய் ! ( மலையேறி )