நட்சத்திர இரவு
கனிந்த மௌனத்துடன்
நிலவின் ஈர ஒளியில்
கொட்டிய பரல்களென
உலவுகின்றன நட்சத்திரங்கள்.
வசீகரமாய் அசைந்து....
மினுக்கியபடி...
இரவில் குழந்தைகளுக்கு
இதுவரை பேசப்படாத சொற்களில்
மொழியூட்டுகின்றன.
பாம்புகள் விழுங்கிய
புனைவுகளின் திசைகளிலிருந்து
விடுவித்துக் கொண்ட நட்சத்திரங்கள்...
உறங்கும் நகரத்தில்
உலவ விடுகின்றன
ஏக்கம் ததும்பும் மீட்சியின் பாடலை.
துள்ளும் மீன்களில் தெரியும்
தன் பிம்பம் அறிய
பூமிக்கு வரும் நட்சத்திரங்கள்...
ஈர நாவால்
புற்களுக்கு உயிரூட்டியபடி
இரவின் கரங்களோடு
எல்லா ஜன்னல்களுக்குள்ளும் நுழைந்து...
பஞ்சுப் பொதியாய்
அணைந்தபடி உறங்கும்
குழந்தைகளோடு.
பின்...
பாற்கடலாய் பெருகும்
அதிகாலையின்
செல்லக் கனவுகளிலிருந்து
சப்தமில்லாத கொட்டாவிகளுடன்
வெளியேறி...
பொன்னிறமாய்
வெப்பமுறும் சூரியன்
அறியாமல்...
கடலுக்குள்
குழந்தைகளின் நினைவோடு
பதுங்கும்....
புதிய இரவின்
விடியலை எதிர் நோக்கியபடி.