தனிமையானார்

தனிமையானார்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அரும்வாழ்வு வாழ்ந்திட்ட தாத்தா பாட்டி
அருகருகே அமர்ந்துபேசி காவல் காத்த
ஒருகுடும்பம் குடியிருக்கும் அளவில் வீட்டை
ஒட்டியன்று இருந்ததுவே பெரிய திண்ணை !
வருவோரும் போவோரும் ஓய்வெ டுக்க
வாஞ்சையுடன் இடமளித்துத் திகழ்ந்த தன்று
விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் பாக்கை மென்று
வீதியுள்ளோர் நலம்கேட்க ஒளிர்ந்த தன்று !

நகரத்தில் மட்டுமன்றிக் கிராமத் துள்ளும்
நாகரிகம் மாறியதால் திண்ணை யெல்லாம்
தகர்ந்தின்று போனதுவே மனிதர்க் குள்ளே
தரைமட்டம் ஆகிவிட்ட நேயம் போன்றே !
முகம்விரிந்த ஆசைகளாய் முகப்பு மாறி
முந்தைவீடு அடுக்ககமாய் உயர்ந்த போதும்
அகம்சுருங்கிப் போனதுபோல் பெரிய வீட்டின்
அறைகளெல்லாம் தனிவீடாய் ஆன தின்று !

கூட்டாக இருந்தவர்கள் மறைந்து போன
குருவிகளாய்த் தனித்தனியாய்ப் பிரிந்து போனார்
காட்டாக இருந்தநல்ல உறவெல் லாமே
காணாமல் சந்ததியர் மறந்து போனார் !
வேட்டிகளும் சேலைகளும் உடலில் மாறி
வேறுஉடை போர்த்தியது போல இன்று
வீட்டிற்குள் செல்பேசி கணினி யாலே
வீற்றிருந்தும் வேறுவேறாய்த் தனித்துப் போனார் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (10-Aug-15, 7:16 pm)
பார்வை : 61

மேலே