வாதோழா வா
வாடாதோழா வாடாநாம் வாழ்ந்து பார்க்கலாம்
வாழபல வழிகளுண்டு உயர்ந்து காட்டலாம்
செல்வங்களை சேர்த்துவைத்து சிறந்து வாழலாம்
செல்லுகின்ற இடத்தில் வெற்றிமாலை சூடலாம்
நித்தம்நித்தம் வேர்வைசிந்தி உழைத்து உயரலாம்
நினைத்ததையே முடித்துகாட்டி மகிழச்சி அடையலாம்
வாளெடுத்துப் போர்தொடுத்து பகையை வீழ்த்தலாம்
வானைமுட்டும் சிகரம்தொட்டு துள்ளி ஆடலாம்
உடலும்மனதும் ஓய்வெடுக்கும் நிலையை நீக்கலாம்
உலகைவெல்ல கவனம்முழுதும் உழைப்பில் செலுத்தலாம்
ஆதிமகள் அவ்வைசொல்லை மனதில் கொள்ளலாம்
சாதிப்பிரிவை வெறுத்து ஒன்றாய்கூடி வாழலாம்
தன்னையறியும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளலாம்
தாழவைக்கும் மடமைகளை துரத்தி அடிக்கலாம்
சாதிஎன்ன என்றுஎன்றும் எண்ணிப் பார்க்காமல்
சாதித்தது என்னஎன்று எண்ணிப் பார்க்கலாம்
ஒன்றுமில்லை என்றுநீயும் வருத்தம் கொள்ளாதே
வென்றுஎடுக்க உலகமுண்டு மறந்து விடாதே
குன்றுபோல உயரவேண்டும் ஓய்வு கொள்ளாதே
கன்றைப்போல துள்ளியெழு கலங்கி நிற்காதே
உள்ளதெல்லாம் அள்ளிடலாம் நம்பி நடந்திடு
உன்னைவிட்டால் உலகமில்லை கவலை நீக்கிடு
வெற்றியுந்தன் பக்கமுண்டு தோளை நிமிர்த்திடு
முற்றிடத்தில் மூச்சுவிட்டு மாலை சூடிடு
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்