அம்மாவாய் இருக்கிறது நினைவு
துவர்த்த நினைவுகள்...
இடைவிடாத சரிவை
வரைகின்றன.
தனிமையின் கசப்புகள்
இரவின் நிழல் எனப் பெருக்க
விளைகிறது
நினைவுக் குழப்பங்கள்.
சருகைப் போல்
மருகிய உடல்
புரிதலற்ற மழை உலகில்
சொற்களாகி குமையும்.
பருவங்கள் அமிழ்ந்த...
கடைசிப் பருவத்தில்
உடலோடு பயணிக்கிறது
உருகும் அரக்காய் இளகிய
கடைசிக் கனவு.
அறுபடும் சிந்தனைகள்
கணப்புக்குள்
பூனையைப் போல்
பதுங்கி விட...
புழுக்கத்தில் படபடக்கிறது
காலம்.
தளர்ந்த
உடல் கிடங்கில்
வேதனை நிரம்பி விட...
மின்னல் கீற்றாகிறது
புன்னகையின் ஒளி...
வயிற்றின் முட்டைக்குள்
ஒரு கோழி மொட்டைச்
சுமந்த காலங்கள்
மனம் நிரப்பும் தருணங்களில்.