அகப்படாத வரிகள்

மார்கழி கோலப்
புள்ளிகளுக்கிடையே...

உங்களுக்கு அகப்படாத
அவளைப் பற்றிய வரிகளை
வரைந்து கொண்டிருக்கிறேன்
இந்த அதிகாலையில்.

அந்தியில்...

அம்புக்குறி போல்
முன்னோக்கிச் செல்லும்
பறவைக் கூட்டத்தின்...

உதிரும் சிறகுகளில்
மிதந்து வருகிறது
அவளுக்கான கவிதை.

அவளின் நினைவுகள்..

வேர் கடத்தும் நீராய்
உடலெங்கும் ஊற...

ஒரு பூவின் பிறப்பாகிறது
அவளுக்கான கவிதை.

ஒரு குழந்தையின் ஸ்பரிசமாய்
காமம் தொடாத வரிகளை...

அவளுக்காக
என் சுவாசப் பைகளுக்குள்
அடைத்து இருக்கிறேன்.

முதிராது சுரக்கும்
மொழியின்...

வெட்கத்தில் துவண்டு விழும்
அவளுக்கான வார்த்தைகள்...

ஈரத் துணி சுற்றிப்
பிடிக்கப் பட்ட கோழியென
அடங்கி விடுகிறது.

பறவைக் குஞ்சாய்
கிளர்ந்தெழத் துடிக்கிறது
பிரியம்.

வண்ணங்கள் மினுங்கும்
பூக்கள்...

இதழ் குவித்து
அவளின் நினைவுகளாய்
திரும்புகின்றன
எனது நாட் குறிப்புகளுக்குள்.

கரைகிறது காலம்....

என் மௌனங்களில்
அவளுக்கான வரிகளை
எழுதிய படி.

எழுதியவர் : rameshalam (18-Aug-15, 8:28 pm)
பார்வை : 102

மேலே