அம்மாவுக்கு கடிதம்

அன்புள்ள அம்மா..
என எழுதத் தோன்றவில்லை
ஏனெனில் அந்த அன்பே
நீதான் என்றாகும்போது..

தொப்புள்கொடி
துண்டிக்கப் பட்டிருந்தாலும்
கண் காணா இடத்திற்கு
விலகிச் சென்றிருந்தாலும்
வியப்பாய் இருக்கிறது..
எப்படி நீ உணருகிறாய்
எனது மனத் துடிப்புக்களை...

பள்ளிப்பையில்
உணவுப் பொட்டலத்திலும்
பயணப்பையில்
மழைநாள் தும்மலுக்கான
மருந்து குப்பியிலும்
நண்பனிடத்தில்
வெளிநாட்டுக்கு
கொடுத்தனுப்பிய
ஊறுகாயிலும்
நீ பொதிந்திருந்தது
உனது இதயத்தையல்லவா?

ஐந்து நட்சத்திர
உணவு விடுதியிலும்
கிடைக்கவில்லை -அன்று
ரசம் சோறு பிசைந்தூட்டியபின்
உன் புடவைத் தலைப்பால்
என் முகம் துடைத்துவிடும்
அந்த அன்பின் திருப்தி..

எங்களுக்கு நீ
காட்டிய நிலாவையும்
பூச்சாண்டியையும்
என் சகோதரிகள்
தங்கள் குழந்தைகளுக்கு
உணவூட்ட சீதனமாய்
எடுத்துச் சென்றனர்..

வசதி வந்தபோது
மறந்து விடுகிற நாங்கள்
வலி வரும்போதுமட்டும்
வாய்விட்டு உன்னை
அழைக்கத் தவறுவதில்லை..

எனக்குத் தெரியும்-
வளர்ந்து நிமிர்ந்து
ஆஜானுபாகுவாய்
உன் முன்னே நிற்கும்போதும்
ஏனிப்படி இளைத்து துரும்பானாய்
என நீ கேட்பது வயதாகி கண்பார்வை
மங்கியதால் அல்ல என்பதை ..

குழம்பிப் போய்விடுகிறேன்..
உனக்கு எழுதும்போது மட்டும்
கடிதங்கள் முற்றுப் பெறாமல்
நின்று விடும் காரணம் அறியாமல்..

எழுதியவர் : ஜி ராஜன் (19-Aug-15, 1:06 pm)
Tanglish : ammavuku kaditham
பார்வை : 2916

மேலே