களைந்திடு பாலகனே கவலையை

​சிந்தனையில் மூழ்கிட்ட சிறுவனே
வருத்தமும் ஏக்கமும் வழிவதேன் !
நிகழ்கால உலகை நினைப்பதாலா
எதிர்கால வாழ்வு எண்ணத்திலா !

சாதிமதம் மோதல்கள் நிகழ்வதால்
சாதிக்கப் போவதும் இல்லையென
போதிக்க நானும்ஒரு புத்தனில்லை
வாதித்தும் பலனில்லை என்பதாலா !

வறுமை இன்றும் அழியவில்லை
வளமும் ஒன்றும் பெருகவில்லை
பசிபட்டினி இங்கு மறையவில்லை
பலஉயிர்கள் மடிகிறது என்பதாலா !

அரசியலில் சனநாயகம் மலிவாகி
அகிலத்தில் பணநாயகம் வழியாகி
அதிகாரமே நடுநாயகப் பொருளாகி
அவனியே அவலமானது என்பதாலா !

பொழுதும் வன்முறை வெறியாட்டம்
எந்நேரமும் குற்றங்களின் குத்தாட்டம்
நடைபெறும் கட்சிகளின் போராட்டம்
என்றுதான் ஓய்ந்திடும் என்பதாலா !

அரிதாரம் பூசியவரெல்லாம் அவதாரமென
அருள்புரியும் அன்றாடம் காய்ச்சிகள்பலர்
அகிலத்தில் அனைவரையும் ஏமாற்றிடும்
கேவலநிலை மாறவில்லை என்பதாலா !

பகுத்து அறிந்திடும் ஆற்றலைதுறந்து
வகுத்து வாழ்ந்திடும் வழியைமறந்து
நிலைத்து நின்றிடும் திறனைஇழந்து
தவிக்கும் மனிதரை நினைப்பதாலா !

விடிந்திடும் ஒருநாள் விரைவுடன்
முடிந்திடும் இவையாவும் நிச்சயம்
களைந்திடு பாலகனே கவலையை
கண்டிடு கனவைநீ கலாம்வழியில் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Aug-15, 9:13 am)
பார்வை : 122

மேலே