காவிரியே கருணை காட்டாயோ
உன்னிடம் எமக்கு உரிமை உள்ளது
என்னன்பு கன்னடக் காவிரியே..!
இருக்கும் நீரை சமமாக பகிர்ந்தால்
எம்நிலம் காணாது வரட்சியே.!
பகைமை மறந்தால் பங்காளி சண்டை
கோர்ட்டு வாசல் ஏறாதே
பசுமை குறைந்தால் விளை நிலங்கள்
ஏகபோக மகசூல் காணாதே
பகிர்ந்து உண்டால் விவசாயி ஒற்றுமை
ஒன்றும் குலைந்து போகாதே
புரிந்து நடந்தால் இரு மாநிலத்திலும்
என்றும் புகைச்சல் இருக்காதே
கங்கை காவிரி இணைப்பு திட்டம்
வெறும் வாயில் முழம் போடுதே
அதை நம்பிய விவசாய கூட்டம்
வயிற்றில் ஈரத்துணியை சுமக்குதே
வடக்கு வாழவும் தெற்கு தேயவும்
பல காரணங்கள் இருக்கிறது
மாநில மொழிகள் தேசியமானால்
இந்த குழப்பங்கள் இருக்காதே
காந்திய சிந்தனை இந்திய தேசத்தில்
அறவே மறந்து போனதே
இருக்கும் ஒருவர் இருவரையும் பாழும்அரசியல்
மறைமுக காவு வாங்குதே
கோமாளிகளை யெல்லாம் எம் எல் ஏ-க்களாக்கி
நாமெல்லாம் ஏமாளிக ளானோமே
மேஜைகளை தட்டிதட்டியே சட்ட சபையை
கேலி கூத்தாய் ஆக்கிடுதே
கொடுத்தோம் கொடுத்தோம் என்கிறார்களே
அது யார் வீட்டு சொத்து ?
எதற்கும் விளம்பரம் தேடி அலைகிறார்களே
இது என்ன கூத்து..?
மைக்கை பிடித்து உறக்ககத்தி புகழதான்
மந்திரிகள் ஆனார்களோ?
சவுக்கை பிடித்து உரக்க விளாசும்
மந்திரிகளும் உள்ளனரோ..?
கடிதம் எழுதி கடிதம் எழுதி
காகிதங்கள் வீணாகுது
காவிரியை எண்ணி மனம் புழங்கி
உயிர்கள் பலியாகுது
திறக்கும் தண்ணியும் கடவாய் மடைக்கே
தாகம் தீர்த்து வருகிறது !
இருக்கும் நிலத்தையும் இழந்து விட்டால்
காவிரி தாயே! நாங்கள் எங்கே போவது?
பெண்ணுக்கு சொத்தில் சமவுரிமை கேட்கும்
சமதர்ம சமூகத்தில்
தண்ணீக்கு பெண்கள் அலையும் நிலைமை
என்னைக்கு தீரூமோ..?
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்த
கழனி காடுகள்
தண்ணீர் இன்றி தவியாய் தவிக்கும்
கோர காட்சிகள்
வரட்சி பூமி - வறட்டு பூமி என்று பாடும்
வெற்று வாய்சவடால் கட்சிகளே - தங்கள்
உறுப்பினர் பதவியை உதறிவிட்டு
நீர் நிலைகளை தூர்வார வாருங்கள்!
இருப்பதையாவது இனிமேல் காப்போம்
எல்லோரும் இணைந்து வாருங்கள்!
தேசிய நதிகள் எல்லோருக்கும் என்று
இன்றே தீர்மானம் போடுங்கள்.