புதியத் தலைமுறையே புறப்படு

புதியத் தலைமுறையே புறப்படடா
புஜங்களில் பலமுண்டு கிளம்பிடடா
அடக்கிடும் தீமையை கொளுத்திடடா
அடலேறாய் துள்ளி எழுந்திடடா

தடைகளே உன்னை வடிவமைக்கும்
தாண்டியே பயணத்தைத் தொடர்ந்திடடா
இன்றையத் துன்பம் நிலையல்ல
இருட்டிய மேகமாய் கரைந்துவிடும்

நேற்றையப் பொழுதின் அனுபவத்தால்
இன்றையப் பொழுதை வசப்படுத்து
நாளையப் பொழுது நலம்கொடுக்கும்
நம்பிக்கை நல்லதைக் கொண்டுவரும்

முனைப்பொடு முயன்றிடத் துணிந்துவிடு
முன்வரும் இடர்களை நசுக்கிவிடு
மண்முட்டி எழுந்திடும் விதைபோல
விண்தொட முயன்றிடு மலைபோல

நெருப்புக் குழம்பாய் புறப்பட்டு
நெற்றியின் வேர்வையை பலியிடடா
சுற்றியும் நடந்திடும் அழும்புகளை
சுடர்முகம் காட்டி அழித்திடடா

ஊமைக் குருடாய் ஒடுங்காமல்
உள்ளத்து உணர்ச்சியைத் தூண்டிடடா
அடங்கியே வீட்டுக்குள் முடங்காமல்
அணிவகுத்தே முயன்று உழைத்திடடா

பொல்லாத சோம்பல் இருக்கும்வரை
பொன்னானப் பொழுது மண்ணாகும்
உம்மால் எல்லாம் முடியுமென்று
உள்ளத்தில் எண்ணியே போராடு

இன்றைய இலக்கை மனம்கொண்டு
இனியொரு கணமும் இழக்காமல்
மரணம் வந்துனைத் தழுவுமுன்னே
மண்ணில் சரித்திரம் படைத்துவிடு

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (1-Sep-15, 6:24 am)
பார்வை : 50

மேலே