ஞான நொடி

நொடிப்பொழுதில் திடுக்கிட்டிருக்குமா
உடல் காற்று முழுதும் வெளியேற்றி
மடிந்த நாக்கை நீட்டி
அலறியிருக்குமா
பதறிக் கதறியிருக்குமா
நீரிலா நிலத்திலா நீள்விசும்பிலா
குழம்பியிருக்குமா
பாசத்துடன் வந்த காலதேவனிடமோ
முன்னோரின் மேல் வில்லூன்றிய இராமனிடமோ
முறையிட்டிருக்குமா
முதலைச் சாமியை மன்றாடியிருக்குமா
நொடிப்பொழுதில் சுதாரித்திருக்குமா
கொக்குபோல் கால்கள் பின்நீட்டிப் பறக்கத்
துடித்திருக்குமா
பூனைப்போலச் சுழன்று முன்னங்கால்கள் முதலிலிறங்க
முயற்சித்திருக்குமா
குளத்தில் விழுந்த தவளையை
யோசித்தவாறே
அரைஅங்குலமே தாழ்ந்த பாதையில்
எதிர்பாராமல் கால்வைக்க வலி
தண்டுவடத்தைத் தாக்கியது
உள்வாங்கி விழுங்கி விழாமல் தொடர்ந்தேன்
விழுந்த என்று மனதில் எழுந்ததே தவறோ
தாவலே வாழ்க்கையின் யாகமாய்க் கொண்ட
வீழ்ச்சியே தாவலின் ஒரு பாகமாய்க் கொண்ட
தவளை வாழ்க்கையில் வீழுமோ
நொடிப்பொழுது துடிப்பதுவும்
அடிப்படையில் படிப்பினையோ

எழுதியவர் : அணைக்கட்டுபாலா (1-Sep-15, 5:08 pm)
Tanglish : gnaana nodi
பார்வை : 112

மேலே