போராட்டங்கள்
போராட்டங்கள்
=============
பொது வேலை நிறுத்தமோ
சாலை மறியலோ
பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல்
எங்களால் எந்தப் போராட்டமும்
நடத்த முடியாது.
அறப்போராட்டம் என்று தான்
அடிக்கடி சொல்வோம்
வேலை தேடி நேர்முகத் தேர்வுக்குச்
செல்பவர்கள் செல்லமுடியாமல்
தவிப்பது பற்றியும்
பிரசவ வலியால் துடிக்கின்ற
பெண்ணைப் பற்றியும்
நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
போராட்டங்கள் பல நடந்ததாலன்றோ
முடங்கிப் போயின தொழிற்சாலைகள் பல.
இது தான் எங்கள் சாதனைகள்!
உற்பத்தியைப் பெருக்கி
எதிர்ப்பைக் காட்டுவதெல்லாம்
இந்தியர்க்கு ஏற்றதல்ல.
நாடு தழுவிய பண்டிகை
நெருங்கி வரும்போது
ஆங்காங்கே அறிவிப்போம்
போராட்டங்களையும் மறியலையும்.
பொதுமக்களுக்குப் பெருத்த இடையூறு என்றாலும்
எங்கள் போராட்டங்கள் எல்லாம்
அறவழிப் போராட்டங்கள் தான்.
எங்கள் குறையைத் தீர்க்கவேண்டியவர்களுக்கு
எதிராக நாங்கள் போராடினாலும்
இடையூறுக்கு ஆளாவது
எங்கள் நிர்வாகங்களோடு தொடர்பில்லாத
பொதுமக்களும் தனி நபர்களும் தான்.
என்றாலும் எங்கள் போராட்டங்கள் எல்லாமே
அறவழிப் போராட்டங்கள் தான்.
*முதல்வர் ஒருவரே தீடீரென்று ஒரு நாள்
முன் அறிவிப்பின்றி
உண்ணா நோன்பிருந்த போது
பாதி வழியிலேயே அருகிலிருந்த
பேருந்து நிலையங்களில்
பேருந்துகள் எல்லாம் நிறுத்தப்பட்டன
லட்சக் கணக்கானோர் பட்ட அவதி பற்றி
யாரேனும் கேட்டீர்களா?
அதுவும் அறவழிப் போராட்டம் தான்.
வாழ்க போராட்டங்களும் மறியல்களும்
வளர்க பொது மக்களுக்கான இடையூறுகள்.
-----------------
*ஜூலை 1993
================
என் தந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு சேலத்தில் இருந்து காரைக்காலுக்குப் பேருந்துப் பயணம் குடும்பத்தோடு. சிதம்பரம் நெருங்கியதும் திடீரென்று அனைத்துப் பேருந்துகளின் இயக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். நாங்கள் பட்ட இன்ன்லை எங்கள் வாழ் நாள் உள்ளவரை மறக்கமுடியாது. அன்று, எங்களைப் போன்று மாநிலம் முழுவதும் இலட்சக் கணகானோர் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.