ஸ்கெலிடன்ஸ் இன் தி கப் போர்டு

ஸ்கெலிடன்ஸ் இன் தி கப் போர்டு
===============================================ருத்ரா

நேர்மைமிகு சகாயம் அவர்கள்
நம் ஜனநாயக அரும்பேழையை
திறந்து காட்டினார்.
ஒரே எலும்புக்கூடும் கபாலங்களுமாய்!
என்னே! கொடுமை!
நம் அறுபத்தொன்பது ஆண்டு
சுதந்திரத்தின் விளைச்சலா அது?
டாலர் தருகிறேன் என்று சொன்னால் போதும்
இமயமலையையும்
நொடியில் ஐஸ்க்யூப்களாக்கி
சுடச்சுட கிடைக்கும்
லாபத்தில் எல்லாவற்றையும்
ஆவியாக்கி விடுவார்கள்.
கங்கையையும் சிந்துவையும்
காவேரிக் கிருஷ்ணாக்களையும் கூட‌
அராபிய பாலைவனத்துக்கு
கப்பல் கப்பலாய் ஏற்றி விடுவார்கள்.
மணல் துளிகள் நம்
சிவப்பு ரத்த அணுக்களாய்
பரவிக்கிடப்பதையும் பணம் பண்ணுவதில்
படுவேகம் காட்டுபவர்கள்
நம் வியாபாரிகள்.
அந்நிய நாட்டு முதலீடு முதலீடு என்று
ஒலிக்கும் போதெல்லாம்
நம் பொருளாதாரக்குளத்தில்
"முதலையிடு முதலையிடு" என்று
அவர்கள் தந்திரமாய் பகடையாடும்
யுக்திகளே ஒலிக்கிறது.
லட்சம் கோடி என்ன‌
கோடி கோடி கோடி..கோடிகள்
குவிந்த போதும்
நம் ஆசைகளும் கனவுகளும்
வெறும் கொட்டாவிகளாய்த்தான் விரிகின்றன.
மனிதனுக்கு மனினுக்கு
விரிந்த இடைவெளிகளில்
நம் பாரத மாதாக்களை காணவில்லை.
நம் மொழி இலக்கியங்கள் ஆவியாகிப்போயின.
வாழ்க்கையே காணாமல் போய் விட்டது!
அப்புறம்"வாழ்க்கைத்தரம்" பற்றி
பேசுவதற்கே ஒன்றுமில்லை!
இருட்டை அறிவு என்று
புதைத்து பூதம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.
வானத்தின் முதுகு சொரியும் கட்டிடங்களிடையே
நண்டுக்கண் சிமிட்டுவது போல் சிமிட்டி
ஆரவாரம் செய்கின்ற கைபேசிக் குவியல்களிடையே
வெறும் "கேமிங்க்" கிராஃபிக்ஸ்களே
ஒரு புதிய டாஸ்மாக்குகள் ஆன‌
மாயா பஜார்களுக்கிடையே
மயானம் கூட இல்லாமல்
எரிந்து புகையும் வாக்குரிமைசக்திகள்
இலவசங்களின் கரன்சிக்கட்டுகளின்
சிதையில் சாம்பல் பூக்களாக தூவிக்கிடக்கும்
இந்த பூமியில்
சகாயத்தின் ஆயிரக்கணக்கான பக்கங்களின்
நியாய வேதங்கள் கூட‌
சிலுவை ஏற்றப்படலாம்.
உலக சந்தை லாபப்பணங்களின்
தராசு தட்டுக்கு சமமாய் மனிதர்கள்
காகித சவங்களாய் நிறுத்துக்காட்டப்படும்
புதிர்ப்பொருளாதாரமே
நம்மை கசாப்பு செய்யக்காத்திருக்கிறது.
இருட்டை அறிவு என்று
புதைத்து
பூதம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.
சரி விடுங்கள்!
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
பிணம் தின்னும் சாஸ்திரங்களே
நம்மை மிதித்துக்கொண்டு ஓடுகின்றன.

====================================================

எழுதியவர் : ருத்ரா (15-Sep-15, 11:50 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 53

மேலே