அறிஞர் அண்ணா பிறந்தநாள் தினம் ---- செப்டம்பர் 15

இனியொரு நாள் நீ வந்தால் ..........(அறிஞர் அண்ணா பற்றிய கவிதை )
இனியொருநாள் நீ வந்தால்
------------இதயநிறை பக்தி யினால்
மனித குலம் முழுவதுமே
------------மண்டியிடும் உன் முன்னால்
தனி மனித மானத்தைத்
------------தக்க வைத்துக் கொள்வதற்கு
முனிவன் என நீநின்று
-------------முடிபான வழி சொன்னாய் !

மீண்டும் இங்கு நீ வந்தால்
------------மீண்டு வரும் நல்வாழ்வு ;
வேண்டுகின்ற நல மனைத்தும்
------------வேகமுறப் பல்கி விடும் ;
மூண்டு பெருகி நிற்கும்
------------மூடப் பழக்க மெலாம்
பூண்டோடு அழிந்து பின்னர்
-------------பூத்து வரும் நல்லுலகு !

கடமை ,கண்ணியம் மற்றும்
-----------கட்டுப் பாடென்றி வற்றை
உடைமை கலாய்த் தந்திட்ட
----------உவமை இலா உத்தமனே !
உடைமை களாய் நீ தந்த
------------உயர் மந்திரச் சொற்கள்
உடைந்தின்று நொறுங்கிப் போய்
-------------உருக் கூடத் தெரியவிலை!

மீட்டொரு கால் நீ வந்தால்
-----------மிகையாகச் சொல்ல விலை ;
நாட்டிடுவாய் நீ தந்த
----------நலம் சான்ற முச்சொல்லை ;
பாட்டெழுதி சொல்லு கிறேன்
-----------பன்முறையும் சொல்லு கிறேன் ;
மீட்டொருகால் வந்தே நீ
-----------மிடிகளெலாம் போக்கி டுவாய்!

அண்ணனென நீ இருந்தாய்
---------அதற்கேற்ற உடன் பிறப்பாய்
வண்ணமுற வாழ்ந்தி ருந்தோம் ;
----------வாழ் வெல்லாம் போச்சுதையோ !
திண்ணம் நீ வருவதெனில்
-----------தித்திக்கும் நம் வாழ்வு !
அண்ணன் கிடைத்த தனால்
------------ஆட் கொள்ளும் பேரின்பம் .

எழுதுகின்ற கோல தனை
---------எடுத்தே நீ பிடித்திட்டால்
அழுத பிள்ளை வாய்மூடும்
----------அப்படியே உருகி விடும்
பழுது மலி சமுதாயம்
-----------பக்குவம் தான் பெற்றிடவே
எழுதுகின்ற கோல் கொண்டு
-----------எழுந் தொருநாள் வந்திடுக !

சொல்லேர் உழவன் என்றே
--------சோதி மிகப் பெற்றவரே!
வில் கொண்டே விளையாடும்
----------வீரர் குலக் கொழுந்தே !
அல்ல லினை அறுக்கின்ற
-----------அழகான சொற் பெருக்கால்
தொல்லை துடைத் தருளத்
----------துரித மாய் வந்திடுக !

பாராளு மன்ற மதில்
-------பல்லறிஞர் முன்னி லையில்
சீரான சொல்லெ டுத்துச்
-------சிறப்பு றவே ஆங்கிலத்தில்
ஆரா தனை புரிந்தீர் ;
--------அது கேட்க மீண்டும் உமைப்
பாரோர் அழைக் கின்றார் ;
--------பரிந்து ஒருநாள் வந்திடுக !

தமிழ் நாடெனப் பெயரைத்
-------தந்திட்டப் பெரி யீரே !
கமழ்கின்ற கலை மணத்தை
--------கைவழியும் வாய் வழியும்
உமிழ்கின்ற ஆற்ற லினை
--------உடைமை எனக் கொண்டவரே !
அமிழ்தே !எம் ஆருயிரே !
--------அழை கின்றோம் வந்திடுக !

இனியொரு நாள் நீவந்தால்
-------இன்பம் ,அன்பு ,வளமை
புனிதம் ,பெருமை பண்பின்
-------புகலிட மாகும் உலகு .
இனியொரு நாள் நீவந்தால்
-------இலக்கியம் பெருகும் உலகில் .
இனியொரு நாள் நீ வந்தால்
-------இறைமை தங்கும் உலகில் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Sep-15, 11:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 740

மேலே