நான் என்ற நான்-கட்டுரை -கவிஜி

ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில்... எத்தனை உறவுகளை.. எத்தனை நண்பர்களை...எத்தனை துரோகங்களை...எத்தனை விரோதங்களை சதா கடந்து கொண்டே இருக்கிறான்.....
கடப்பதும்.... கடக்க கடக்க யோசிப்பதும் சதா நடந்து கொண்டே இருக்கிறது... மனதின் ஆழ்முனை ஒரு வகை கீறலைக் கொண்டே நகருகிறது....நம்பினோரை சில சமயம் கை விடுகிறோம்.... நம்பாதவரை சில சமயம் பகைத்துக் கொள்கிறோம்... தான் தான் என்று தன்முனைப்பின் வெளிப்பாடாய்.. கோபங்களும்.. காழ்ப்புணர்ச்சிகளும்... மேலோங்கி நிற்கின்றன என்பதை புரிந்தும் புரியாமல் கடந்து செல்கிறோம்....
இங்கு எல்லாக் கதவுகளும் அடைத்தே கிடக்கின்றன என்று கூறும் நாம் நம் வீட்டு ஜன்னலைக் கூட திறந்து வைப்பதில்லை...சுயநலம் என்று பேசும் சிந்தைக்குள் பொது நலத்தின் சாரல் கூட அடிப்பதில்லை.... அர்த்தம் தெரியாத நலன்களின் வாழ்வுக்குள் சிக்குண்ட பிறழ்வின் சூட்சுமக் கடி எறும்பின் நகர்தலாகவே இருக்கிறோம்... நாவில் தூய்மை.. இல்லாத சமூகமாக மாறிப் போவதை கண்டும் காணாமல் ரசிக்கிறோமா....என்று கூட சந்தேகம் வருகிறது.... "சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..." என்ற வள்ளுவனின் வாக்கை நினைத்துப் பார்க்கும் அதே சமயம், எப்போதும் யாருக்கும் வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்...... ஆனால் அதை பாதியாவது நிறைவேற்றிட முடியாத போது கூட அது பற்றிய சிறு சுய சலனம் கூட இல்லாமலிருப்பது தான்... நாம் கடந்து விட்டதாக நினைக்கும் நாம் தவற விட்ட பாதையாக இருக்கிறது...
"நீ தவறு"- என்று காட்டும் மனம் கொண்ட நாம், நம்மைப் பற்றி சிந்திப்பது குறைவு என்றே படுகிறது.. நினைத்த நேரத்தில் எல்லாமுமாக நாமே ஆக வேண்டும் என்று நினைப்பதில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்க்கப் படுகிறது...நினைக்க ஒரு காலம்... கூட ஒரு காலம்... வெறுக்க ஒரு காலம்... வேரோடு அறுக்க ஒரு காலம்... என்பது மனித சித்தாந்தத்தில் மிகப் பெரிய பின்னடைவு.....
சுயம் முக்கியம்.. சுயம் சார்ந்தே யோசிப்பது தத்தளிக்கும் படகு போல......
"பழக பழக பாலும் புளித்தது" என்று பெரியவர்கள் விளையாட்டாக கூறவில்லை.... என்பதை கடக்கும் மன நிலை இப்போது உள் வாங்குகிறது....... இங்கு எல்லா வேலைக்கும்.. எல்லா நிகழ்வுக்கும்.. அதே போல எல்லா உறவுக்கும்.. ஒரு ஆரம்பம்.. ஒரு இடைவேளை.. ஒரு முடிவு இருக்கிறது... நவீன மயமாக்கலின் விரல் பிடித்த பாதையில் முடிவுகள் சீக்கிரம் எட்டி விடுகின்றன, எட்டாத உறவுகளாய்...... திகட்டி விட்ட காதல்களாய்..... முகமூடி கிழிந்த நட்புகளாய்........அவரவர் இடத்தில் அவரவர் பெரியவரே... என்பதை புரிவதும் புரியாதது போல இருப்பதும்... ஒரு வித சலனத்துக்கு இட்டு செல்கிறது... ஆழ்மனத்தின் வெளிப்பாடு பலபோது மிக குரூரமாகவே இருக்கிறது.. எத்தனை கலைகளால் அதை மூடி வைத்தாலும் ஒரு நாள் பீறிட்டு வெளி வந்து விடுகிறது...அந்த முகங்கள் மிக மிக கோரமாக சொல்லாமல் சொல்லிப் போகின்றன.. மனங்களின் குருதி வழியும் சுவாசத்தை. ஒவ்வொரு முகமும் அந்த முகம் அல்ல.. என்பதை பொட்டில் அடித்த உண்மைகளாக இன்றைய பல நட்புகளும்.. பல உறவுகளும்.. வெளிப் படுத்தி விடுகின்றன...
நம்பிக்கை மிகப் பெரிய வாழ்விய மானுடத்தை முன்னெடுத்து செல்கிறது...ஆனால்.... அவநம்பிக்கையின் வெளிப்பாடாய்தான் நம் ஒவ்வொருவரின் கதவும் அடைத்துக் கிடக்கிறது.... ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு முகம் மாட்டிக் கொள்ளும் நாம் மனதை மாற்றிக் கொள்ள முடியாமல் தவித்து அழுது, புலம்பி பின் நம்பிக்கையற்றவர்களாக மாறி... திட்டி, திட்டு வாங்கி.. முறிந்த சிறகுகளோடு, தனிமையில் துவளும் இன்றைய வாழ்வு முறை சிக்கல்களைக் கொண்டே கட்டமைக்கப் படுகிறது...
இன்று கூட யாரோ எழுதிய ஒரு வாசகம்.. மீண்டும் மீண்டும் மிகப் பெரிய சிக்கலை மனதுக்குள் விதைத்தது...
"சண்டையிட்டு உன்னை விட்டு விலகிய பின்னும் உன் ரகசியம் காக்கப் படுமாயின் நீ இழந்தது சிறந்த நண்பனை.."
எத்தனை அற்புதமான வரி... நட்பின் புனிதத்தை இதற்கு மேல் எப்படி சொல்ல.. இதே போல்..."சுந்தர பாண்டியன்"என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.. "குத்தினது நண்பனா இருந்தா செத்தா கூட வெளிய சொல்லக் கூடாது.." என்று... மெய் சிலிர்ந்த நிஜமான அன்பின் ஆழப் பதிந்த வெளிப்பாடாகவே நான் உணர்ந்தேன்.. (இது இருபாலருக்கும் பொருந்தும்... ஆண்களுக்கு சமமாக பெண்களும், குத்துவதும் காலம் காலமாக நடந்து கொண்டு தானே வருகிறது....)
இன்றைய முகப் புத்தக கால கட்டத்தில் அத்தகைய நட்பும் உறவும் அரிதாகவே இருக்கிறது...நினைக்காத இடத்தில் நின்று விடும் மனதுக்கு ஒன்றுமே புரியாத பனி மூட்டங்களின் கூடு விட்டு கூடு பாயும் தத்துவம் மட்டும் நிறைவாக தெரிந்திருக்கிறது.. தெரியாததைப் போல ஒன்றும் சொல்லாத மணி மகுடத்தின் மேற்போர்வை கலைய கலைய அழிந்து விழும் ஆணவ துகள்களின் நுணுக்கங்களில் யார் கண்டார்.. கடவுள் கூட மனமாய் வீற்றிருக்கலாம்...வருபவர்கள் இப்போதெல்லாம் தங்குவது கூட இல்லை.. போய் விடுகிறார்கள்.. போகிறவர்கள் வருவது கூட இல்லை... போயே விடுகிறார்கள்... எல்லாமே ஒரு மனக் கணக்கின் அடிப்படையின் சிறகடிப்பாகவே பதியப் படுகிறது... மற்றவர் முகம் காண முடியாத இடத்தில் நின்று கொண்டு முகமறியா சொற்களை வீசிக் கொண்டே இருக்கிறோம்...உளம் அறியாத சிந்தை போல......
எல்லாம் தெரியும் என்ற மனப் போக்கு காற்றுப் புரவி போல... அது.. கட்டுக்கடங்குவதே இல்லை... ... விபரீத மலை உச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் போய் நிற்கும் என்பது புரிந்த பின்னாலும்.. முடியாத இடைவெளிக்குள் தேநீர் கூட சப்பென்று இருப்பது தான் இன்றைய, அறிந்த உண்மை...உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே உள்ள நூலிழை புரியாத போது ஒன்றுமே சிந்திக்க முடியாத தன்னார்வத்தில் வெறும் கோபத்துக்குள் தன்னை பூட்டிக் கொண்டு எல்லாம் தெரிந்த மனநிலைக்குள் போய் விடுகிறோம்... போயே விடுகிறோம்...
பொய் நிஜம் கடந்த தெளிவு ஒரு போதும் நம்மை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளுவதில் நம் தனிமை நமக்கு இடம் கொடுக்கிறது.... கொடுப்பதும் எடுப்பதும் மரணம் செய்யும் மிகப் பெரிய பிரதான வேலை எனப் படுவதில் எடுத்து கொடுக்கும் ஜனனத்தில், தான் மட்டும் அழியவே முடியாத அகங்காரமாய் அழுவதைத்தான் புரியவே முடிவதில்லை...காலம் முழுக்க எதிர்பார்த்து எதிர்பார்த்து பின் காலத்தையே எதிர்பார்க்கும் சிற்றறிவின் வாசலையும் மூடியே விடுகிறோம்...
எதிர்க்காற்று வந்து கொண்டேயிருப்பதில் தானே பாதை கண்டடைய வேண்டும்.. அப்படிதானே இந்த பரிணாமம் தோன்றியது... எல்லாம் கையில் கொடு... அட இன்னொரு கையையும் கொடு என்பதில் எல்லாமும் அறிந்த மனமாய்... முகமூடி போட்டுக் கொள்வதில் கடக்கவே முடியாத பாதையை வசவுகளால் அழித்துக் கொள்கிறோம்... கட்டற்ற மனதை அடக்கி பிடிக்கவே முடியாத சூழலில்.. பாதையும் இல்லாத போக்குக்கு வழி உண்டோ...? ஒளி தான் உண்டோ....!
புகழும்.... ஒரு வகை போதை என்று நம்ப மறுக்கும் சூழலில்.. புகழில் இருந்து கசியும்.. இறந்த கால எதிர்கால எச்சங்களை தாங்கும் மனவலிமையும் அற்றுப் போய்விடுகிறது.. காலங்களால் எதுவும் மாயம்.. எதுவும் காயும் என்னும் தத்துவ மலைக்குள் குடி தேடி கிடப்பதில் குண்டும் குழியுமான சாலைக்குள் புரண்டு கொண்டே கிடக்கிறது பிறழ்ந்த மனது..."நான்"- கடக்கும் பாதையை அது மூடியே கிடக்கிறது.... துரோகம் அழிக்கும் கதவை அது திறக்கவே விடுவதில்லை... நம்பினோரைக் கை விடும் பாத்திரத்தை அது நிரப்பியே வைக்கிறது....நம்பிக்கையற்ற தருணம் ஒன்றில்.... நிலைக் கண்ணாடியிடமும் உண்மை சொல்ல பயந்து மூலையில் பதுங்குகிறது நரி போல வேஷம் போட்டுக் கொண்ட மனம்....நம் மனம்....
கவிஜி