வாலி - சில நினைவுகள்
கலங்கரை விளக்கம் படத்திற்காக ஒரு டூயட் பாடல் எழுத வேண்டும் என எம்.எஸ்.வி, வாலியை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.
எம்.எஸ்.வி தனது ரோலக்ஸ் வாட்சையும் , தங்கச் செயினையும் கழட்டி ஆர்மோனியப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு " ஒரு நல்ல பல்லவி சொன்னா இதெல்லாம் உங்களுக்குத் தான் " எனக் கூறியிருக்கிறார்.
உடனே வாலி ' காற்று வாங்கப் போனேன் , ஒரு கவிதை வாங்கி வந்தேன் " என எழுதிக் கொடுத்திருக்கிறார்.
சொன்னபடியே ரோலக்ஸ் வாட்சையும் , தங்கச் செயினையும் வாலிக்குக் கொடுத்துவிட்டாராம் எம்.எஸ்.வி !
0
அடிமைப் பெண் படத்திற்காக "ஏமாற்றாதே ஏமாறாதே " என்ற பல்லவியை வாலி எழுதிக் கொடுத்திருக்கிறார். கே.வி.மகாதேவன் போட்ட ட்யூனில் இந்த வரி உட்காரவில்லை. எம்.ஜி.ஆருக்குக் கவலை.
உடனே கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி, ஒவ்வொரு வார்த்தையும் ரெண்டு வாட்டி பாடலாமே எனக் கூறியதும்
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே ....
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போனது..
0
பாசவலை படத்தில்
குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள நரிக்குச் சொந்தம்
என்ற பாடலின் சரணத்தில்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனா
எட்டடி தான் சொந்தம்
என்று பட்டுக் கோட்டையார் எழுதியதைப் படித்துவிட்டு " ஏன் கவிஞரே , செத்தவனுக்கு ஆறடின்னு தான எழுதுவாங்க ,நீங்க என்ன எட்டடின்னு எழுதியிருக்கீங்க ? " என எம்.எஸ்.வி. கேட்டிருக்கிறார்.
அதற்கு பட்டுக் கோட்டையார் " நான் கொஞ்சம் உசரம் ஜாஸ்தி , அதான் ரெண்டடி அதிகமாகச் சேத்திருக்கிறேன்" எனக் கூறினாராம்.
இந்தப் பாடலுக்காகவே இந்தப் படத்தை 10 முறை பார்த்தாராம் வாலி.
முகராசி படத்தில் , " உண்டாக்கி விட்டவர் கள் ரெண்டு பேரு " பாடலில் கூட அதே எட்டடியைக் கொண்டு பாடல் எழுதியிருப்பார் கண்ணதாசன்..
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்....
0
எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்காக
நான் அரசன் என்றால்
என் ஆட்சி என்றால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார் என்று தான் வாலி முதலில் எழுதினார்.
அதைப் படித்துவிட்டு தயாரிப்பாளர் நாகிரெட்டி , அரசியல் நெடி அடிக்குது , சென்சாரில் மாத்தச் சொல்வார்கள் எனக் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு நான் ஆணையிட்டால் தமிழ்நாட்டில் ரயில் ஓடாது என்ற அண்ணாவின் வசனத்தைக் கொஞ்சம் மாற்றி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று எழுதினார் வாலி.