முகமூடிகள்

உயிரற்ற வயல்பொம்மைகளுக்கு
முகமாகும்போது காவல்காரர்களாகும் நாங்கள்
உயிருள்ள மனித முகங்களில்
பொருந்தும்போது திருடர்களாகிப் போனாலும்
குழந்தைகளின் முகங்களில்
உட்கார்கையில் குதூகலமாய் ஆகிவிடுகிறோம்.
எம்மை அணிந்து திருடும் மனிதரை
முகமூடி அணிந்த திருடரெனாமல்
முகமூடித் திருடரென்றே எமை
நேரடியாய் திருடராக்கும் குருடரே
இருப்பதை இல்லாததாய் காட்டுமுங்கள்
அக மூடிகளிலும்
இருப்பதை இருப்பதாய்க் காட்டும்
முகமூடிகள் எம் சுயம் சுயநலமில்லாததே..
உங்களின் எவரினதும்
நகலாக உருமாறும் எங்களின்
எங்களை அணிந்து
பீதியுலாப் போகும் உங்களிலும்
எங்களின் அசல்கள் அசலாகவே
வீதியுலாப் போகிறோம்.
முகங்கள் தொலைத்து
முகமூடிகள் எம்மில் புதையும்
உங்கள் முகங்களுக்குப் பின்னால்
ஆயிரமாயிரம் ..
எங்களுக்குப் பின்னால்
எதுவுமில்லை ..
உங்கள் திருட்டுத் தொழிலுக்கு
உடந்தையாக்கி அவமானப்படுத்தும்
அவலங்களில் இருந்து மீள
உபாயங்கள் தேடித் திரியும்
கேள்விக்குறியான வாழ்வியலில்
எங்களையும் திருடி விற்று
பிழைப்பு நடத்தும் கேவலமானவர்களே..
தூசு படிந்த எங்கள் அழுக்குகளை
அகற்றுவதற்குள் முதலில்
உங்கள் மன அழுக்குகளை
அகற்றிக் கொள்ளுங்கள் போதும்...
தேவை கருதி என்றென்றுமுங்கள் கைகளின்
விளையாட்டுப் பொருளாய் மட்டும்
இருந்து கொள்கிறோம்.
*மெய்யன் நடராஜ்