ராமனும், அம்மன் சிலையும்

ராமனும், அம்மன் சிலையும்!
-----------------------

பாண்டியன், வள்ளி தம்பதியினரின் ஒரே மகன் ராமன். அவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். பாண்டியன் ஒரு சிற்பி. அவரது கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ்துரை என்பவரை திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்ற வீர வாஞ்சிநாதனின் உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அரசாங்கத்திடம் இருந்து விருது பெற்றவர் பாண்டியன். தலைசிறந்த சிற்பி என்ற பெயர் அவருக்குண்டு.

அன்று பள்ளி விடுமுறை. தாய் வள்ளியிடம் சாப்பாடு கேட்டான் ராமன். “”டேய்… கொஞ்சம் பொறுடா, இப்பத்தான் சாதம் அடுப்பில வெந்திட்டிருக்கு, வடிச்சதும் தர்றேன்” என அம்மா சொல்ல, “”போம்மா… எனக்கு சாதமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்” என்று அம்மாவிடம் கோபித்துக் கொண்டான் ராமன்.

“”ஏண்டா… இப்படி கோபப்படுறே? பொறுமையே கிடையாதுடா உனக்கு. கொஞ்ச நேரம் பொறுமையா இரு வடித்து தர்றேன்” என்று வள்ளி சொல்ல, பொறுமை இழந்த ராமன், “”எனக்கு சாதம் வேண்டாம்” என உரக்க கத்தியபடி படுக்கையில் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் கண்களைத் தழுவியது.
பொறுமையும், சகிப்புத் தன்மையும் அறவே கிடையாத தன் மகனை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே உணவு தயாரிப்பதில் மும்முரமானாள் வள்ளி.

ராமனை சிலை வடிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் தந்தை பாண்டியன். வழியில் அவனுக்கு பாப்கார்ன் பாக்கெட்டை வாங்கிக் கொடுத்தார். அதை கொறித்துக் கொண்டே சென்றான். பாண்டியன் சிலை வடிக்க குவித்து வைக்கப்பட்டிருந்த கல்லிலிருந்து ஒன்றை எடுத்து சிலை வடிக்க முயன்றார். அவர் கையில் வைத்திருந்த உளி கல்லை சிலையாக்க முயன்றது.

உடனே, “”ஐயோ! வலிக்குதே… என்னை விட்டுவிடுங்க…” என அலறியது அந்தக் கல். இதையடுத்து, பாண்டியன் அந்தக் கல்லை தனியே வைத்து விட்டு வேறொரு கல்லை எடுத்து சிலை செதுக்க முயன்றார். சிறிது நேரம் மௌனமாக இருந்த அந்தக் கல்லும், “”அம்மா உடம்பெல்லாம் வலிக்குதே…” என அலறியது.

சிற்பி பாண்டியன் அந்தக் கல்லையும் எடுத்து ஒதுக்கி வைத்து விட்டு வேறொரு கல்லை எடுத்து சிலை செதுக்க முயன்றார். அந்தக் கல்லோ மற்ற இரண்டு கற்களைப் போல கதறாமல் மௌனமாய் பொறுமையாய் உளியின் துன்பத்தை தாங்கிக் கொண்டது. சிற்பி சந்தோஷத்தோடு சிலை வடித்தார். அது அழகான அம்மன் சிலை ஆனது.

பாண்டியன் அந்தச் சிலையை வணங்கினார். கரடு முரடாக இருந்தக் கல் அழகான அம்மன் சிலையாகி அம்மனே நேரில் வந்து காட்சி தருவது போல் இருப்பதை உணர்ந்து கரம் கூப்பினான் ராமன். அப்பாவின் திறமையை மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்தான்.

சிறிது நேரத்தில் ஒருவர் கழுதையுடன் வந்தார். அப்பாவிடம் துணி துவைக்க கல் ஒன்று கேட்டார். அப்பா முதலில் சிலை வடிக்க முயன்று உளி படும் முன்னரே அலறிய கல்லை எடுத்துக் கொடுக்க, அதை கழுதையின் மீது ஏற்றி குளக்கரைக்கு துணி துவைக்கும் கல்லாக்கிட கொண்டு சென்றார் சலவைத் தொழிலாளி.

சற்று நேரத்தில் நான்கைந்து பேர் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அம்மன் சிலையைக் கண்டு வியந்து வணங்கி சிற்பி பாண்டியனை பாராட்டி அம்மன் சிலையையும், கோயில் படிக்கட்டுக்காக இரண்டாவதாக சிற்பி சிலை வடிக்க முயன்று துன்பங்களை சகித்துக் கொள்ளாமல் பொறுமையிழந்த கல்லையும் தூக்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்றார்கள். கூடவே பாண்டியனும், ராமனும் சென்றார்கள். பீடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் சிலையை பயபக்தியுடன் வணங்கினார்கள்.

அம்மனை தரிசிக்க வந்த அனைவரும் கோயில் படிக்கட்டில் போடப்பட்டிருந்த கல்லை மிதித்துக் கொண்டே வந்தார்கள். அழகான அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் படிக்கட்டாக்கப்பட்ட கல் மனம் வருந்தியது. அது அம்மன் சிலையை பார்த்து, “நீ மட்டும் பொறுமை காத்தாய். துன்பங்களை சகித்துக் கொண்டாய். அதனால்தான் நீ இன்று பல பக்தர்கள் வணங்கும் அம்மன் சிலையாகி இருக்கிறாய். உனக்கு தினமும் அபிஷேகமும், ஆராதனையும் செய்கிறார்கள். சிற்பி என்னை சிலை வடிக்க முயன்ற போது துன்பத்தைக் கண்டு துவண்டேன். பொறுமை இழந்து அலறினேன். இப்போது மனித கால்களால் மிதிபடுகிறேன்’ என்றது.

உடனே அம்மன் சிலை, “உன் நிலைமை இப்படி இருக்க உளி படும் முன்னே பொறுமையிழந்து துன்பத்தை தாங்கி கொள்ள மனம் இல்லாத முதல்கல் இப்போது குளக்கரையில் துணிகளால் அடிபடுகிறது. நித்தமும் அழுக்கு அபிஷேகம்தான் அதுக்கு நடக்கிறது. இனி வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். பொறுமைக் காத்து துன்பங்களை தாங்கிக் கொண்டால் மட்டுமே வெற்றி நிச்சயம்’ என அம்மன் சிலை சொல்ல, “புரிந்து கொண்டேன்’ என்றது படிக்கல்.

“”டேய்… ராமா எழுந்திருடா… சாப்பாடு ரெடியாயிச்சு. வா சாப்பிடலாம்” என்று வள்ளி அழைக்க, ராமன் கண்களை கசக்கியபடியே எழுந்தான். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவன் இவ்வளவு நேரம் பார்த்ததெல்லாம் கனவு என்பது. கனவு என்றாலும் நனவு போல் அல்லவா இருக்கிறது.

பொறுமைக் காத்து துன்பங்களை தாங்கிக் கொண்ட தோள்கள்தான் வெற்றி மாலையை சுமக்கும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, அதன்படி நடக்க உறுதி எடுத்துக் கொண்டே கைகளை அலம்பச் சென்றான் அம்மா தந்த உணவை ருசிக்க.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (3-Nov-15, 4:56 am)
பார்வை : 80

மேலே