நாங்கள் என்றொரு காலம்
நாற்பது வருட
இடைவெளிக்கு பின்
சொந்த ஊருக்குள் நுழைந்த
முதல்
பார்வையிலேயே யாரோவாக
மாற்றப் பட்ட என்
அடையாளத்தை
மாற்றி நிரூபிக்க
திண்ணைகளும் பாட்டிகளும்
அக்காக்களும் நண்பர்களும்
தெரிந்த முகங்களும்
இல்லாமல் போக,
என்ன செய்வதென்றே
புரியாமல் நீண்ட என்
வீதிகளின் ஓரங்களில்
ஆளுக்கொரு
அலைபேசியோடு
இன்றைய தலைமுறை
குனிந்தே அமர்ந்திருந்தார்கள்...
நான்
தேடிக் களைப்புற்று
ஒரு யாரோவாகவே
திரும்புகையில்
நரைத்து, களைத்து
சரிந்து நின்ற
கோவில் புளிய மரத்தில்
என்றோ பதிந்து வைத்திருந்த
எங்கள் பெயர்
தூரத்தில்
தொலைந்து விட்ட புள்ளியில்
சிதறிக் கிடந்தது...
யாருமற்ற சுற்றத்தில்
வாய் விட்டு ஒரு முறை
எங்கள் பெயரை
சொல்ல முடிந்த எனக்கு
அதன் பிறகு
அங்கு நிற்க முடியவில்லை....
கவிஜி