உரிமைகள் பறிக்கப்படும் -போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான்

ஆமையின் ஓடும்
களவாடப்படும்.
கரையான் புற்றில்
பாம்பும் உலவாடும்.
***
பட்டாம்பூச்சி
சிறகில் ஓட்டையிட்டு
பாலைநிலமும் கண்
மூடி ரசிக்கப்படும்.
***
கடலுக்கும் எல்லையிட்டு
வலைபோடும் கைகளுக்கு
பரிசாய் விளங்குகள்
போடப்பட்டன.
***
கிளைகள் உடையாத
மரத்தின் வேர்கள் வெட்டப்பட்டன,
வறுமைக்கும் வருவாய் வரி
அரசினால் விதிக்கப்பட்டது.
***
முள்ளிவாய்க்கால் ஓடையில்
முள்ளாடை உடலுக்கு உடையானது.
சிரிய தேசத்தில் தீப்பந்தம்..,
பசிக்காத இரைப்பைக்குள் உணவானது.
***
செல்வன் துப்பும் உமிழும்
ஏழையின் மேல் விழுந்தது
மேகத்தின் மழைத்துளியும்
மோகத்தால் விலையானது.
***
குடிசை வீட்டு பெண்கள்
சீதனத்தால் முதிர் கன்னிகளாயினர்.
பத்தும் பெத்தும் தெருவில் வந்தோர்
ஆலமரத்தில் காற்றாடியானார்கள்.
***
பணமில்லாத திறமைசாலி
கனவிழந்து குருடனானான்.
பிணம் உறங்கும் சுடுகாடும்
ஜாதிவெறியால் பிளவானது.
***
பெண் தேகம் கண்டு
நாய் போல் அலையும் கூட்டம்
தவழும் பிள்ளைக்கும்
ஆணுறை வாங்கும் இச்சை நாட்டம்.
***
திசுக்கள் இன்று காசானது.
வைத்தியனும் களவுக்கு துணையானான்.
நீதிமன்ற வாசல்களும்
குற்றத்திற்கு நியாயமாகிறது.
***
சுதந்திரம் என்பது
எழுத்தில் வரலாறானது.
மனித வாழ்க்கையில்
வெளிச்சமெனும் வரவாகவில்லை.
***
சிங்கத்தில் மீசையிலும் ஒட்டடை
படிந்து குகைவாசம் பூண்டது.
சுரண்டப்பட்ட உயிர்களும் வேண்டும்.
இன்றே, பறிக்கப்பட்ட உரிமைகளும் வேண்டும்.
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Nov-15, 7:05 am)
பார்வை : 215

மேலே