பல நாள் மனப் போராட்டம் வலிகளில் இல்லை வரிகளில்
*நம் வாக்குரிமையை பணத்தால் பறிக்கின்றனர்...
அறியாமையை பயன்படுத்தி...
*நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை தட்டிவிடுகிறது பக்கத்து மாநிலம்...
*தரமாகவும்,கொள்ளளவு முறையாகவும் கிடைக்க வேண்டிய
அத்தியாவசிய தேவைகள் சுரண்டப்படுகின்றன...
நியாயமே இல்லாமல் நியாய விலைக்கடைகளில்...
*தரமானது என்று கொள்ளளவை குறைத்து தரும்
உயர்தர நிறுவனங்கள்...
*கொள்ளளவை கொட்டி வைத்துவிட்டு
தரத்தை தாரை கேட்கின்றன...
குறுநில நிறுவனங்கள்...
*வலியவன் எளியவனை அடித்துப் பிழைப்பது போல்
குடிசைத் தொழிலை இங்கே கோபுரங்கள் சாய்க்கின்றன...
*ஊரை அடித்து உலையில் வைக்கும் அரசாட்சி நடக்கிறது...
மதுபானம் எனும் போர்வையில்...
*EMI ,லோன் என்று சாமானிய மனிதனை
சமாளிக்க விடாமல் செய்யும் வணிக நிறுவனங்கள்...
*கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் தந்து விட்டு
சாராயத்தை விற்பது என்ன யுக்தி...
ஏழைகளின் வயிற்றில் அடிப்பதா...
*ரியல் எஸ்டேட்களை வளர்த்து விட்டு
கான்கீரிட் விவசாயம் நடக்கிறது ஏரிகளில்...
*இலவசங்களை கிள்ளி தந்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது அரசியல்...
ஆனால் அவை உண்மையில் இலவசங்கள் அல்ல
நம் ஒவ்வொருவரின் தலையில் சுமற்றப்படும் கடன் சுமை...
*தண்ணீர் உரிமையை கூட
அளந்து தருகிறது
பாட்டிலில் காசிற்கு...
*சாதி சான்றிதழை கேட்பதே தவறு...
அதை வாங்க தரவேண்டும் லஞ்சம்...
அதை கேட்கும் அரசிற்கே...
*நடைபாதையில் நடக்கவேண்டுமெனில் கேட்க வேண்டும் உரிமை ஆக்கிரமிப்புகளிடம்...
*லட்சங்கள் கல்விக்கு வாங்கிக் கொண்டு
மனசாட்சியே இல்லாமல் கல்வி சேவை என்று
சொல்லுகின்றன கல்வி நிறுவனங்கள்....
சரி அவர்கள் பாஷையில்...
என்ன வியாபாரம் செய்து பிரயோஜனம்
மன்னிக்கவும்...
என்ன சேவை செய்து பிரயோஜனம் ...
படித்தவர்களுக்கு வேலை எங்கே?
ஒரு வேளை
வேலை இல்லா பட்டதாரிகளை...
உருவாக்கும் சேவையை தான் செய்கிறீ(ரீ)ரோ!
இவர்களை பேசி என்ன வரப்போகிறது...
எல்லாம் வளர்த்துவிட்ட சட்டத்தையும் அரசியலையும் தான்
நல்லா நிக்கவச்சு கேள்வி கேக்கணும்...
*ஏன் என்று கேள்வி கேட்டால்
சாதாரண மனிதனை பொடாவில்
தூக்கி எறியும் அரசு...
*தரமற்ற பொருட்களுக்கு அனுமதி
அளித்து எங்கள் உயிரோடு
விளையாடி லாபம் பார்க்கும் அரசியல்...
*எங்கள் வரிகளை எல்லாம்
சுரண்டி கொண்டு
எங்களை இதுக்கும் மேலே (இன்னும் இன்னும்)
கடன்காரர்களாகவும்,பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் அரசாட்சி...
*காற்றை கூட காசாக மாற்றும் அரசியல்
எங்களை மட்டும் கல்விக்கே வட்டி கட்ட வைக்கிறது...
*22ம் நூற்றாண்டிலாவது பெண்களுக்கு சம உரிமை கிடைக்குமா?
*மீனவரின் உரிமை
கடலில் கரைத்த பெருங்காயம் போல்
நுகரக் கூட முடியவில்லை...
*பாரதி மட்டும் இன்று இருந்திருந்தால்
சிறைவாசம் தான் செய்திருப்பார்...
வெள்ளையர்களால் அல்ல ...
கொள்ளையர்களால்...
~பிரபாவதி வீரமுத்து